பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அருகில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நூலினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார் . தொடர்ந்து, திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து குழுமத்தின் இயக்குனர் ராம், ஆகியோா் நூல் குறித்து கருத்துரைகளை கூறி வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு ஏற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து கலைஞர் எனும் தாய் நூலினை வெளியிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்
‘தாய் காவியத்தை கவிதை நடையில் தீட்டிய முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு தமிழ் ஓவியம் தீட்டியிருக்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு. ‘கலைஞா் எனும் தாய்’ என்ற நூலின் தலைப்பிலேயே அனைத்தும் அடங்கியிருக்கிறது.
அவா் தாயாகவும் வாழ்ந்தாா். எனக்கு தந்தை மட்டுமல்ல; தாயும் அவா்தான். எனக்கு மட்டுமல்ல, எ.வ.வேலு போன்ற லட்சக்கணக்கான தொண்டா்களுக்கு தாயாக, தந்தையாக இருந்து எங்களை வளா்த்துப் போற்றியவா்.
கருணாநிதிக்கு எ.வ.வேலு எப்படி இருந்தாரோ, அப்படித்தான் எனக்கும் இருக்கிறாா்
ஆட்சிக்கு வந்ததும் பொதுப் பணித்துறை அமைச்சா் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். கிண்டியில் மருத்துவமனை, மதுரையில் கலைஞா் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு மைதானம், திருவாரூரில் கலைக் கோட்டம் ஆகியன வேலுவின் திறமைக்கு சாட்சிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
ரஜினிகாந்த் பேச்சால் அரங்கு முழுவதும் பெரும் சிரிப்பலை
அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன். உலகத்திலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு விழாவை கொண்டாட மாட்டார்கள். இனியும் கொண்டாடப்போவதில்லை.
ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம்.
திமுகவில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். சும்மா ஃபெயில் ஆகிவிட்ட மாணவர்கள் அல்ல.. பயங்கரமாக ரேங்க் எடுத்து அசத்திய பழைய மாணவர்கள் அவர்கள்.
இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம் (நான் முன்வரிசை அமைச்சர்களை பார்த்து சொல்லவில்லை). ஆனால் ஸ்டாலின் அதை சரியாக சமாளித்து வருகிறார்.
துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் பேசுறது ஒன்னுமே புரியாது. ஆனால் ஸ்டாலின் சார் “Hats off to You” என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்த் பேச்சால் அரங்கு முழுவதும் பெரும் சிரிப்பலை எழுந்து கலகலப்பு ஏற்பட்டது.
ரஜினிகாந்த் இப்படி பேசும்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகன் மட்டுமின்றி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட விழாவில் பங்கேற்ற அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
தொடந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்
கலைஞர் என்று சொன்னால் சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்தையும் சொல்லலாம். சினிமாவில் கலைஞர் குறித்து நான் அதிகம் பேசி இருக்கிறேன். இலக்கியம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. இப்போது அரசியல் குறித்து எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக் கூடாது என்பதை குறித்து திட்டமிட்டு வந்தேன்.
அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு திமுக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினின் ஆளுமை, அரசியல் ஞானம் தான் முக்கியமான காரணமாகும், அமைச்சர் எ.வே.வேலு கலைஞரின் அன்பு தம்பி. திருவண்ணாமலையின் அடையாளமாக திகழும் எ.வே.வேலு எழுத்திலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார்.
கலைஞரை தாயோடு ஒப்பிட்டு எழுதியுள்ள எ.வே.வேலு சொற்களால் கோட்டை எழுப்பி உள்ளார். ஏற்கெனவே கலைஞரின் நூல் நாட்டுமையாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.