Close
நவம்பர் 25, 2024 12:48 காலை

“நாம பேசிக்குவோமா?” பாக். பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு..!

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இந்திய பிரதமர் மோடிக்கு சிறப்பு சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜங்க உறவுகள் மிக மோசமான நிலையில் இருப்பதை இந்த உலகமே அறியும். எல்லா நிலைகளிலும் இந்தியாவை ஒரு எதிரியாகவே பார்த்து வந்த பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையில் உள்ளது.

உலக அரங்கிலும் பாகிஸ்தானுக்கு நல்ல பெயர் இல்லாமல் போனது. மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனபோது உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிய-அமெரிக்க தொழில் அதிபர் ஷாஜித் தாரார், மோடி போல பாக்கிஸ்தான் நாட்டுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று கூறியதுடன், இந்தியாவுடன் நல்லுறவை பேணவேண்டும். இந்தியாவைப்போல வளர்ச்சியை சிந்திக்கவேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கூறி இருந்தார்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதற்கு வாழ்த்து கூறாததையும் வேதனையோடு வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பிரதமர் மோடிக்கு சிறப்பு சந்திப்புக்கு அழைப்பு அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபரில், அரசாங்கத் தலைவர்கள் கவுன்சிலை (CHG) பாகிஸ்தான் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்காக, பிரதமர் மோடிக்கு ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு அனுப்பியுள்ளார்.

தவிர, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மற்ற தலைவர்களுக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை பாகிஸ்தான் நடத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய முடிவுகளை ஒன்றாக எடுப்பார்கள். முன்னதாக, பிரதமர் நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இந்த முறை, உச்சிமாநாடு கஜகஸ்தானில் நடந்தது. அதில் அவர் பங்கேற்கவில்லை. இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அவர் முற்றிலும் மறுத்துவிட்டார். ஆனால் இந்தியாவின் சார்பில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அமைச்சரோ அல்லது அதிகாரியோ கலந்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அண்டை நாடு வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று கார்கில் விஜய் திவாஸ் அன்று பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி நேரடி செய்தி அனுப்பினார். பயங்கரவாதத்தை பரப்புவதன் மூலம் தலைப்புச் செய்திகளில் இருக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியா திரும்பியுள்ளார். உக்ரைன் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி ஆகியோர், ஐநா சாசனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் மேலும் ஒத்துழைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top