Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

பயன்பாடற்ற புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பயன்பாடற்ற பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களை  வகைமாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ.. உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்  வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் ஏழை, எளிய மக்கள் பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் ரேசன் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று அப்பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறேன் என்றும், நீதி மன்ற உத்தரவு என்று சொல்லியும் பல இடங்களில் வீடுகளை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால், மேற்படி இடங்களில் வசிக்கும் மக்கள் பெரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களை நிலைகுழையச் செய்யும் இந்நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு அனைத்து வகையான புறம்போக்குகளிலும் குடியிருந்து வரும் மக்களுக்கு உரிய வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். அதுவரை ஏழை, எளிய மக்களின் விடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், பயன்பாடற்ற புறம்போக்கு நிலங்களை உரிய வகைமாற்றம் செய்து வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்க பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார்  கவிவர்மன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top