திருமணம் என்பது வெறும் உடலுறவு என்னும் ஒன்றிற்காக செய்யும் ஒரு சம்பிரதாயம் இல்லை.
அடுத்த தலைமுறையை உலகிற்கு பரிசளித்து வாழ்க்கை நெறிகளையும், முறைகளையும், அறத்தையும் கற்றுக் கொடுத்து அதை இனி வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் அற்புதமான செயல். அது ஒரு பந்தம். பூமிக்கு மனித இனத்தைக் கொடையாக அளிக்கும் ஓர் புனித உடன்படிக்கைக்கு கீழான உறவு.
சும்மா ஒன்னும் முன்னோர்கள் சொல்லவில்லை. திருமணம் என்பது ஒரு ஆயிரங்காலத்துப் பயிர் என்று. அந்தக் காதலை வெளிப்படுத்தும் ஒரு உறவிற்கு பெயர் தான் திருமணம். இதற்கு அழகு தேவையா இல்லை. தேவையே இல்லை. உங்களுக்கு 80 வயதாகும் போது உங்கள் துணைக்கு 75 வயதாவது ஆகும்.
கன்னம் சுருங்கி விடும். பல்லு னு ஒன்னு இருக்கவே இருக்காது. பேரப் பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையில் மொபைல் போனில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருக்கும் நீங்கள் உயிரற்றப் பொருளாக கூட கணக்கிடப்பட மாட்டீர்கள்.
ரேசன் கார்ட் மகன் பெயரில் இருக்கும். அதில் உங்கள் பெயர் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இன்னைக்கு வாய் நிறைய அரசியல் பேசும் உங்களை, அகவை 80 இல் ஓட்டு போட அழைத்துச் செல்லுதல் கூட ஒரு சுமை அதுக்கு ஆட்டோ பிடித்து பூத்துக்கு தூக்கிட்டுப் போய்ட்டு அய்யயய்யோ…
தொல்லைப் பிடித்த வேலை என்றெண்ணி ஒருவரும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். குடும்பம் மொத்தம் ஓட்டு போட சென்றிருந்த வேலையில் ஒருத்தி நரைத்த முடியுடன் கன்னங்கள் சுருங்க, என்னங்க, விடுங்க நம்ம புள்ளைங்க தான? நல்லா இருந்துட்டுப் போகட்டும். மனசுல எதையும் வச்சுக்காதீங்க. இந்தாங்க இந்த வாழப்பழத்தை சாப்பிடுங்க. என்று சொம்பில் தண்ணீருடன் நீட்டுவாள் பாருங்க. அவளுக்கு பெயர் தான் மனைவி.
படுக்கையில் இருந்தாலும், ராசாத்தி ராசாத்தி என்றுக் கடைசி மூச்சிலும் அவளை மட்டுமே தேடுவானே அந்த உறவிற்கு பெயர் தான் கணவன். அம்மா இறந்தப் பிறகு ஜிமிக்கி எனக்கு, தாலி செயின் உனக்கு. அண்டா எனக்கு குண்டா உனக்கு என்றுப் பங்கு வைத்துக் கொள்ளும் சம்பிரதாயங்கள் நடக்கையில், ஒரு காய்ச்சல் தலை வலிக்கும் உட்காராத மனுஷன் ஒரு மூலையில் உட்கார்ந்து என்னை விட்டுட்டு போயிட்டியேம்மா இனி யாரும்மா இருக்கா எனக்கு என்று தலை மீது கை வைத்து….
உலகத்தையே மறந்து, என்னையும் உன் கூடயே கூட்டிட்டுப் போயிருக்க கூடாதா தாயி, இனி இந்த உசுரு இருந்தால் என்ன செத்தால் என்ன? என்றுத் தன்னையும் அறியாமல் வாழ்க்கையில் முதல் முதல் கண்ணீர் வடிப்பானே, அது தான் காதல். வீட்டுக்கு வந்ததும் அவளைத் தான் தேடும் அவன் கண்கள். பிறந்த வீட்டிற்கு அவள் பெற்றோரைப் பார்த்து விட்டு வர அவளை அனுப்பி விட்டு பத்து முறையேனும் பஸ் ஸ்டாண்டிற்கு சென்று மாமனார் ஊரிலிருந்து வரும் பேருந்து எப்பொழுது வரும் என்று விடியலுக்காக காத்திருப்பானே அதுதான் காதல்.
வீட்டில் அம்மா இல்லை என்று குழந்தைகள் தேடவில்லை என்றாலும், அம்மாவுக்கு ஒரு போனைப் போடு, எங்க வந்துட்டு இருக்கானு கேட்போம் என்று இருபது முறையேனும் போன் செய்து பேசி விட்டு, இரண்டு நிமிடம் கழித்து இருபத்தி ஓராவது முறை போன் செய்ய சொல்லுகையில், அப்பா அம்மா வருவாப்பா, ஏன்ப்பா காலில் சுடு தண்ணி ஊத்திகிட்டு நிக்கிற என்று குழந்தைகளே திட்டும் அளவிற்கு ஒருவன் குழந்தைத்தனமாக நடந்துக் கொள்வானே அகவை 50 இல் அதற்கு பெயர் காதல். அந்த தேடல் இருக்குப் பாருங்க அது மற்ற எந்த உறவிலும் இவ்வளவு இருக்காது.
எப்படா மனைவி அவங்க அம்மா வீட்டுக்குப் போவா நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம் என்று சுயநலமாக யோசிக்காது அந்தக் காதல். பக்கத்து தெரு ராமசாமி அண்ணன் ஹாஸ்பிடலில் இருந்து டிஜ்சார்ஜ் ஆகி இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்துருக்காங்களாம், வா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோம் என்று எங்கே சென்றாலும் அவளை இழுத்துச் செல்லும் பாருங்க. அது தான் அந்தப் பந்தத்தின் மகிமையே. அழகும் வீண். சௌந்தரியமும் வீண். எல்லாம் முப்பது முப்பத்தைந்து வயது வரை தான். அப்புறம் அவளுக்கு நரைத்த முடி எட்டிப் பார்க்கும், உங்களுக்கு முடியே இருக்குமா இருக்காதா என்பது சந்தேகம் தான்.
மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியானவளே தவிர, கண்ணுக்கு காட்சிப் பொருள் இல்லை. இதை உணர்ந்துக் கொண்டால் போதும். யாரைத் திருமணம் செய்தாலும் நிச்சயமாக அவர்களை அழகாகப் பார்க்க முடியும். புற அழகு தான் அழகு என்று நீங்கள் அணிந்திருக்கும் போலியான மாய கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பாருங்கள். உலகம் மொத்தமும் அழகாகத் தெரியும். ஆனால் உங்கள் மனதிற்குள் உள்ள உலகிற்கு உங்கள் துணை மட்டுமே பேரழகியாகத் தெரிவாள். அந்த ராஜ்ஜியத்திற்கு அவள் தான் மகாராணி. எனவே திருமணம் செய்யுங்கள்…. அனாதையாக எப்போதும் வாழாதீர்கள்.