Close
செப்டம்பர் 20, 2024 2:34 மணி

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன? அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன..?

சங்கடஹர சதுர்த்தி

மகா சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்த மாதமான ஆவணி மாதத்தில் வருவதாகும். இந்த நாள் விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. அதனால் இந்த நாள் பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான் இந்த சதுர்த்தி நாளில் சந்திரனின் சாபத்தைப் போக்கியதாகவும் கூறப்படுகிறது

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம்; ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். இந்நாளில் விரதம் அனுஷ்டித்து வந்தால் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி

மிகவும் சக்தி நிறைந்த மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப் பெருமானைத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் இல்லம் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒரு வருடத்தில் சுமார் 13 சங்கடஹர சதுர்த்தி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஒவ்வொரு சதுர்த்திக்கும் உருவாகும் யோகமும் பலன்களும் வேறுபட்டது.

சங்கடஹர சதுர்த்தியில், விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி அவல் பாயசம் நைவேத்தியம் செய்து அருகில் உள்ளவர்களுக்கு வழங்குங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான்.

நாளை (21ம் தேதி சனிக்கிழமை) புரட்டாசி மாதம் 5ம் தேதி சங்கடஹர சதுர்த்தி.

விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அருகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

பூஜை செய்யும் முறை

விநாயகருக்கு விளக்கேற்றி, கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள விநாயர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.

பிரசாதம்

பிரசாதத்திற்கு லட்டு அல்லது மோதகம் மிகவும் நல்லது. இவை இரண்டு விநாயகருக்குப் பிடிக்கும். மேலும் கடவுளுக்கு நெய் தீபம் ஏற்றி, கணபதி ஸ்துதி பாடி ஆரத்தி செய்யவும். மேலும், இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து இரவில் சந்திர தரிசனம் செய்து உணவு உண்ண வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

வேடர் குலத்தில் பிறந்து தீயச் செயல்களை புரிந்து, காட்டில் வருவோரைக் கொடுமைப்படுத்தி கொண்டிருந்தான் “விப்பரதன்”. ஒரு நாள் அவ்வழியாக வந்த முனிவரை வெட்டி வீழ்த்த எண்ணினான். முனிவரோ தன் சக்தியால் அவனை செயல் இழக்க செய்தார்.

வேடனோ முனிவரிடம் வேண்டி உயிர்ப்பிச்சை கேட்டான். அவனை மன்னித்த முனிவர், உன் பாவம் தொலையட்டும் என்று கூறி “கணேச மந்திரத்தையும், விரதத்தையும் செய்து வாழ்வை நல்லபடி அமைத்துக் கொள்” என்று கூறி ஆசீர்வதித்தார். விப்பரதன் மந்திரத்தையும் விரதத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்தான். அவனே பின்னாளில் புரூகண்டி என்ற முனிவர் ஆனார். புரூகண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாம் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ்வே சங்கடஹர சதுர்த்தி தோன்றியதாக வரலாறு கூறுகின்றது. நம் சங்கடங்களைக் களைவதற்காகவே சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நாம் மேற்கொள்கின்றோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்

மாசி மாதம் தேய்பிறையும். செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி, ஓராண்டு விதிப்படி விரதம் மேற்கொண்டால் நமக்கு ஏற்பட்டிருக்கும் எல்லாத் துன்பங்களும் நீங்கப் பெறுவோம். செல்வம், செல்வாக்கு, கல்வி முதலியவற்றில் சிறப்புடன் விளங்கலாம். இவ்விரதத்தை தொடங்கும் நாளில் சூரிய உதயத்திற்கு ஐந்து நாழிகைக்கு முன்னரே எழுந்து புனித நீராடி சங்கல்பம் செய்து விநாயகப் பெருமானைத் தியானம் செய்ய வேண்டும். அன்று உபவாசம் இருப்பதே மேலாகும்.

விநாயகப் புராணத்தை பாராயணம் செய்து, சதுர்த்தி விரதம் போன்று இதற்கும் விநாயகப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம். மாலை சந்திரனை வழிபட்டு கோயில் சென்று அபிஷேகம் பார்த்து விநாயகர் கவசம் படித்து விரதத்தை மேற்கொள்ளலாம்.

சங்கடஹர சதுர்த்தி வரலாறு

வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றிய பரத்வாஜ முனிவர் ஒரு சமயம் நர்மதை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்நதியில் நீராடிக் கொண்டிருந்த ஒரு மங்கையை பார்த்து மனம் மயங்கி, அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று இல்லறம் நடத்தினர்.

அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் ஒரு தேவலோக மங்கை என்பதால், குழந்தை பிறந்த பிறகு குழந்தையை விட்டுவிட்டு அவள் தேவலோகம் திரும்பி விட்டாள். முனிவரும் அந்தக் குழந்தையை அவந்தி நகரிலேயே விட்டுவிட்டு மீண்டும் தனது தவத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் குழந்தையை பூமா தேவி எடுத்து வளர்த்து வந்தாள். குழந்தையின் மேனி அக்னி போல செந்நிறமாக ஒளி வீசியதால் அதற்கு, ‘அங்காரகன்’ எனப் பெயர் சூட்டினாள்.

அந்தக் குழந்தைக்கு ஏழு வயது ஆனபோது பூமாதேவியிடம் அது, “அம்மா எனது தந்தை யார் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசையாக உள்ளது. என்னை எனது தந்தையிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று கேட்டான்.

பூமாதேவி குழந்தையை பரத்வாஜ முனிவரிடம் அழைத்துச் சென்று, “முனிவரே இவன்தான் தங்களது மகன். இவனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டினாள்.

முனிவரும் தனது மகனை அகமகிழ்ந்து ஏற்றுக்கொண்டு பல கலைகளிலும் சிறந்த வல்லவனாக வளர்த்து வந்தார். முனிவரிடம் அங்காரகன், “தந்தையே இவ்வுலகில் உள்ள எல்லா கலைகளிலும் நான் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு பரத்வாஜ் முனிவர், “நீ விநாயகப் பெருமானை நோக்கி தவம் செய்தால் சர்வ கலைகளிலும் வல்லவனாக திகழ்ந்து நீ நினைத்தது அனைத்தும் நிறைவேறும்” என்று கூறி அதற்குரிய மந்திரங்களை உபதேசம் செய்த அனுபவித்து வைத்தார்.

அவந்தி நகரை அடுத்த ஒரு காட்டில் தனது தவத்தைத் தொடங்கினான் அங்காரகன். பல வருடங்களாக கடுந்தவம் மேற்கொண்டதன் பலனாக மாசி மாதம் சதுர்த்தி திதி அன்று இரவு வேளை சந்திரோதயம் காலத்தில் விநாயகர் பெருமான் அங்காரகனுக்கு காட்சி தந்தார்.

அதனைக் கண்டு அகம் மகிழ்ந்த அங்காரகன் விநாயகப் பெருமானை பலவாறு போற்றித் துதித்தான். “ஐயனே எனக்கு தாங்கள் சில வரங்களை அருள வேண்டும்” என்று வேண்டினான்.

“உன்னுடைய கடுந்தவத்தால் கட்டுண்டேன். நீ கேட்கும் வரங்கள் எதுவாயினும் தருகிறேன் கேள்” என்று ககூறினார் விநாயகர். “ஐயனே சர்வ மங்கல ரூபத்தோடு தங்களை தரிசித்த நான் அனைவராலும், ‘மங்களன்’ என்று அழைக்கப்பட வேண்டும்.

தேவலோகத்தில் தேவாமிர்தம் பருகி அமரனாக வேண்டும். என்னை வழிபடுபவர்களுக்கு எல்லாம் நான் செல்வம் அளிக்கும் கிரகமாக மாற வேண்டும். நான் தங்களை தரிசித்த இந்த சதுர்த்தி நாளை அனைவரும் கொண்டாட வேண்டும். யாரெல்லாம் இந்த சதுர்த்தி நாளன்று தங்களை வழிபடுகிறார்களோ அவர்களின் துயரங்களை நீங்கள் நீக்க வேண்டும்” என்று பலவாறு வரங்களைக் கேட்டான்.

“நீ கேட்ட வரங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்” என்று கூறியதோடு மட்டுமில்லாமல், யாரெல்லாம் சங்கடஹர சதுர்த்தி அன்று என்னை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி வாழ்வில் அனைத்து வளங்களையும் தருவேன்” என்ற வரத்தையும் விநாயகப் பெருமான் தந்தருளினார். அந்த அங்காரகனே செவ்வாய் கிரகமாக அனைத்து மக்களுக்கும் செல்வம் அளிக்கும் கிரகமாக இருந்து கொண்டிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top