Close
டிசம்பர் 3, 2024 5:27 மணி

 பவாசெல்லத்துரையுடன் நேர்காணல்.. இங்கிலாந்திலிருந்து சங்கர்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பவாசெல்லத்துரையுடன் நேர்காணல்

எழுத்தாளரும் இலக்கிய ஆளுமையுமான பவா செல்லத்துரையின் இரண்டு வார இங்கிலாந்து பயணத்தில், ஓய்வில்லா இலக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கிடையே, எப்படியாவது ஒரு நேர்காணலை நிகழ்த்தி விட வேண்டும் என நினைத்தேன். அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றம் இல்லாமல் நடந்தேறியது.

இரண்டு பகுதிகளாக நேர்காணல் நிகழ்ந்தது. முதல் பகுதி ஹார்பண்டனில் வசிக்கும் நண்பர் வடிவேல் வீட்டிலும், இரண்டாவது பகுதி என்ஃபீல்டில் வசிக்கும் நண்பர் திரு வீட்டிலும் இயல்பாக நடந்து முடிந்தது.

கேள்விகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்கிற பெரிய திட்டமிடல் ஏதுமின்றி, சில வரையறைகளுக்கு உட்பட்டு 16 கேள்விகளை தயாரித்தேன். என்றும் பதினாறாக, இந்த 16 கேள்வி பதில்கள் இளமையாக இருக்கும். பவாவிடம் குறுக்குக் கேள்விகளையும், பொருத்தமற்ற கேள்விகளையும் கேட்கக் கூடாது என்றும் கூடவே பவாவை சங்கடத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தி விடக்கூடாது என்பதில் மட்டுமேகவனமாக இருந்தேன்.

ஆனால், பவாசெல்லத்துரை  எந்த மாதிரியான கேள்விகளை வேண்டுமானலும் கேளுங்கள் சங்கர் என இயல்பு மாறாத புன்னகையுடன் சொன்னார். இந்த கேள்விக்கு இப்படி தான் பதில் இருக்க வேண்டும் என்கிற எந்தவித முன் தயாரிப்புமின்றி, தேவையானவற்றை
தேவையான விதத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற உணர்வுடன், நிதானமாக, யாரையும் காயப்படுத்தாமல் கண்ணியமாக இருக்க வேண்டும் என்கிற மேம்பட்ட புரிதலுடன் இருந்தது பவாவின் பதில்கள். இதயத்திலிருந்து வரும் சொற்கள் அப்படி தான் இருக்க முடியும்.

வாய்மொழி மூலமான இந்த உரையாடல் ஒலி-ஒளிப்பதிவு வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். தமிழகத்தில் படைப்பிலக்கியத்தின் குரலாக இயங்கி வரும், தமிழ் இலக்கிய மாத இதழான உயிர் எழுத்து பத்திரிகையின் ஆசிரியர் எனது நண்பர் சுதீர் செந்தில்.

இந்த நேர்காணலுக்கு ஊக்கம் கொடுத்து, உயிர் எழுத்தில் பிரசுரம் செய்வதாக உள்ளார். நேர்காணல் ஒன்று எழுத்து வடிவம் பெறும் போது சுவையான கட்டுரை போன்று வடிவம் பெறுவதோடு, பல்வேறுபட்ட உடன்படுகிற மற்றும் எதிர்மறைக் கருத்துக்கள் வெளிவருவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்பது நிதர்சனம்.

சூழல், சூழ்நிலைகள் குறித்து எந்த கவலையுமின்றி எந்த கோணலுமின்றி நேரடியாக நேர்காணலில் பதில்கள் தந்த பவாவுக்கு நன்றி.
கவித்துவமாய் அமர்விடம் அமைத்துக்கொடுத்த வடிவேல் மற்றும் திரு வுக்கு நன்றி.நேர்த்தியான முறையில், அலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்து தந்த நண்பர் லிங்கேஷ் -க்கு நன்றி.நேர்காணலை எழுத்து வடிவில், அச்சு வடிவில் கொண்டுவரப் போகிற உயிர் எழுத்து சுதீர் செந்திலுக்கு நன்றி. இது ஒரு கூட்டு முயற்சி.

ஒரு செயலை சிறப்பாக செய்ய அடிப்படைத் தகுதிகளான கூர்ந்த அறிவும், திறமையும், பொறுப்பும், ஒழுக்கமும் வேண்டும் என்பார்கள்.
அப்படி இருக்க ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் செயல் சிறப்பாக செயல்பட, மேற்கூறிய தகுதிகள் உள்ளதா என ஒருவரிடம் பகுப்பாய்வதே நேர்காணல். அந்த வகையில் நாங்கள் செய்த செயல் செம்மையாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top