Close
நவம்பர் 23, 2024 12:44 மணி

எழுத்தாளர் செம்பை மணவாளன் மறைவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல்

புதுக்கோட்டை

செம்பை மணவாளன்

புதுக்கோட்டை எழுத்தாளர் செம்பை மணவாளன் (22.9.2024) மறைவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தி:
சமீபத்தில் என் நண்பர் ராஜ்குமார் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் குறிப்பிட்டார்… சார்  செம்பை மணவாளன்  என் உறவினர். பள்ளிக்கூடத்தை கட்டிக் கொடுத்த கொத்தனார். காலையில் சரியான நேரத்திற்கு வருவார். மிக நேர்த்தியாக பூச்சு வேலைகளை செய்வார். அப்படித்தான் இவரை தினம் பார்த்து இருக்கிறேன்.
ஆனால் ஒரு மேடையில் நீங்கள் இவரை அறிமுகப்படுத்துகிற போது இவருடைய எழுத்தாற்றலை. இவர் சிந்தனைகளை பட்டியலிட்ட போது நான் மிகவும் வியந்து போனேன் என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் எனும் கிராமத்தில் பிறந்தவர். செம்பாட்டூர் என்பதைத் தான் செம்பை என மாற்றிக்கொண்டு செம்பை மணவாளன் என்கிற புனைப்பெயரோடு கதைகள் எழுதத் தொடங்கி னார்.
இவரது கதைகள் தொடர்ந்து தாமரை இதழில் வெளிவந்தன. எழுத்தாளர் பொன்னீலனின் மனதுக்கு மிக நெருக்கமான எழுத்தாளர்.இவர் சிறுகதைகள் எழுதுவது மட்டுமல்ல, சிந்தனைக் கட்டுரைகளை ஏராளம் எழுதியுள்ளார்.
அதில் மிகக் குறிப்பாக நதிநீர் இணைப்பு பற்றிய பத்தாண்டு கால தொடர் தேடலில் ஆராய்ச்சியில், தீர்வுகளும் திட்டங்களும் அடங்கிய பெரிய ஆய்வுக் கட்டுரையை எழுதி அதனை ஒன்றிய அரசிடம் அனுப்ப வேண்டும் என்று தயாராக வைத்திருந்தார்.
இந்தியா முழுக்க ஓடும் நதிகள் பற்றிய பேரறிவு அவரிடம் இருந்தது.
பள்ளிக் கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஒரு கொத்தனாராக உள்ளே சென்றாரே தவிர மாணவனாக அவர் இருந்ததில்லை. ஆனால் பேச்சாற்றலிலும் எழுத்தாற்றலிலும் சமூக சிந்தனையிலும் அறிவிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும் கொண்டிருந்தார்.என் மீது கொள்ளை பிரியம் அவருக்கு.அவரது மகன் அழைப்பின் பேரில் அவர் அமெரிக்கவில் சில காலம் இருந்தார்.
திடீரென ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து என்னிடம் பேசினார்.அமெரிக் காவில் உறங்கும் போது கனவில் நான் வந்ததாகவும், என் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதைப் போல் கனவில் நான் தெரிந்ததாகவும் , இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று வாஞ்சையோடு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
கலை இலக்கியப் பெருமன்றம் அவருக்கு தாய் வீடு போல.நியூசென்சுரி புத்தக நிலையம் சார்பில்  அவரது பல நூல்கள் வெளிவந்துள்ளன. மிக மிக எளிமையான வேட்டி சட்டையில் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் பங்கேற்பார்.
அவரது மகன் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். இன்னொரு மகன் செம்பை முருகானந்தம், திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருக்கிறார். முருகானந்தம் அவர்களும் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர்.தன் சிறுகதை நூலுக்காக பல விருதுகளை பெற்றவர். அவர் தன் தந்தையை உடன் வைத்திருந்து அன்போடு கவனித்துக் கொண்டவர்.
செம்பை மணவாளன் தேச நலனையும் சமூக அக்கறையையும் மட்டுமே சிந்தித்தவர்.மனதால் கூட யாருக்கும் தீங்கு நினைக்காத நற்குணத்தை பெரும் சொத்தாக வைத்திருந்தார். அவருக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல்களையும் வீர வணக்கத்தையும் செலுத்துவதாகவும் அதில் கவிஞர் தங்கம்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top