திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலையாக எழுந்து நிற்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விசேஷம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 13ம் தேதி மகா தீபப்பெருவிழா நடைபெறும்.
அன்று மாலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார்.
வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர், தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தீப திருவிழா துவங்கும் முன், கோவிலில் இவ்விழாவுக்கான பூர்வாங்க பணிகளான, வாகனங்கள் புதுப்பித்தல், பழுது பார்த்தல், அழைப்பிதழ் அச்சிடுதல், தீபம் ஏற்ற நெய் கொள்முதல், வர்ணம் பூசுதல், என பல்வேறு பணிகள் துவங்க விநாயகர்,அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன், பரிவார தேவதைகள் ஆகியவற்றை வழிபட்டு, பணிகள் துவக்குவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு கோவிலில், பந்தக்கால் முகூர்த்த விழா, இன்று காலை நடைபெற்றது. பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. இன்று அதிகாலை 5.45 மணி மேல் 7 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
தொடர்ந்து, அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 6.50 மணிக்கு பூர்வாங்க பணிகளை செய்வதற்கான பந்தக்கால் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் நடப்பட்டது.
பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதீபன், திருக்கோயில் பிச்சகர்கள் ரகுராமன், விஜயகுமார், சிவாச்சாரியார்கள் , திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் ,திருக்கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் , திருக்கோயில் ஊழியர்கள், அண்ணாமலையார் திருக்கோயில் மேலாளர் செந்தில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
I was suggested this web site by my cousin Im not sure whether this post is written by him as no one else know such detailed about my trouble You are incredible Thanks