Close
நவம்பர் 22, 2024 8:06 காலை

அகத்தியரும் போகரும் வழிபட்ட முருகன் கோயில் எது தெரியுமா?

தென்பழநி என்று அழைக்கப்படும் பாலசுப்ரமணியஸ்வாமி கோயில்

தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்து கோயில்கள் மலைகளின் மீதே அமைந்துள்ளது. இதற்குக் காரணம் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் எனும் வாசகத்திற்கு ஏற்ப மலைகளில் எல்லாம் முருகன் கோயில்கள் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத் மாநிலம் வரை பரவிக் கிடக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாகவும் பல மாநிலங்கள் வழியாகவும் மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்து கிடக்கிறது.

குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் உள்ள 1,800 அடி உயரமான மலை உச்சியில் தென்பழனி உச்சிமலை சித்தர்கிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

பல சித்தர்கள் இத்தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டதால் இம்மலை சித்தர்கிரி என்றும் அழைக்கப்படுகிறது. சித்தர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் மகாமுனி அகத்தியரும்,போகர் சித்தரும் வழிபட்ட ஸ்தலம் என்பதால் தென்பழனி என்றும் அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமான் தன் மயில் மீது ஆகாய மார்க்கமாக வரும் போது மிகுந்த தாகம் எடுத்தமையால் இம்மலையின் மீது இறங்கி தன்னுடைய கூரிய வேலினால் ஊன்றி ஊற்றாக்கி தாகம் தணிந்த இடம் என்றும் வட்டார வழக்குக் கதைகள் உள்ளன. அன்று முதல் இன்று வரை எந்த வெயிலிலும் வற்றாத ஊற்றாக இந்த சுனை இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அதிசயமாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் ஆரல்வாய்மொழியின் மேற்கு பக்கம் கிழக்கு முகமாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 990 மீட்டர் உயரத்தில் தென்பொதிகை மலையின் மீது இம்மலைக் கோவில் அமைந்துள்ளது.

தமிழில் சொல்லப்படும் ஐந்திணைகளில் நான்கு திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு நிலப்பகுதிகளை இங்கு காணலாம் .

மற்ற முருகன்கோயில்களைக் காட்டிலும் தனிச் சிறப்பு கொண்ட கோயில் இதுவாகும். கோயில் வரலாறு குறித்து கோயில் அர்ச்சகர் கிருஷ்ணன் இவ்வாறு சொன்னார்.

“சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கோயில் கட்டப்பட்டதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.

இந்த கோயிலிலிருந்து முருகன் சுற்று வட்டார கிராம மக்களுக்கு அருள் வழங்குவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். ஆரல்வாய்மொழி தரைப்பகுதியிலிருந்து சுமார் 1500 அடிக்கும் மேல் இந்த கோயில் அமைந்துள்ளது.

இங்கு சித்தர்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக அறியப்படுகிறது. மேலும் பௌர்ணமி தோறும் சித்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்வதாக நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் வற்றாத ஜீவ நதி போல் கிணறு ஒன்று உள்ளது. இந்த கோயிலில் முக்கியமாக மூன்று விசேஷங்கள் நடைபெறுகிறது. முதலாவதாகத் தைப்பூசம் அன்று அபிஷேகம், அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதேபோன்று வைகாசி விசாகப் பெருநாளன்று அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். மேலும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 7 நாட்களும் இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதேபோன்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு மலர் முழுக்கு நடத்தப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top