90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹரியானா மாநிலத்தில் தற்போதுவரை பா.ஜ.க., காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவிவருகிறது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அங்கு தீவிரமாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதேசமயம், பா.ஜ.க. காங்கிரஸ் இரு கட்சியினரும் கடுமையான உட்கட்சி பிரச்சனையில் சிக்கி பல்வேறு சிக்கல்களை சந்தித்துவருகின்றன.
முதலில் ஹரியானா காங்கிரஸ் கட்சியில் இருந்து ஐந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 21 பேரை கட்சியிலிருந்து ஆறு வருடத்திற்கு நீக்கியது.அதே பாணியில் தற்போது பா.ஜ.க. தனது கட்சியில் முன்னாள் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த இரண்டுபேர் உட்பட எட்டு முக்கியமாணவர்களை தனது கட்சியில் இருந்து ஆறு வருடத்திற்கு நீக்கியுள்ளது.
ஹரியானாவில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அங்கு அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்சனைகள் பூதாகரமாக கிளம்புகிறது. குறிப்பாக பா.ஜ.க.வில் கடுமையான உட்கட்சி அதிருப்தி நிலவி வருவதாக தெரிகிறது. உதாரணத்திற்கு பாஜக 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தபிறகு கடுமையான எதிர்வினைகளை தங்கள் கட்சிக்குள் சந்தித்து வருகிறது.
வேட்பாளர் பட்டியலில் பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏவும் மூத்த தலைவருமான சசி ரஞ்சன் பர்மருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இதன் காரணமாக அவர் ஒரு பேட்டியில் கண்ணீர்விட்டு அழுதார். இது வைரலாகியது. அதேபோல், தற்போது போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. உட்பட எட்டு பா.ஜ.க.வினர் கட்சி வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அவர்கள் எட்டு பேரையும் பாஜக ஆறு ஆண்டுகளுக்கு கட்சியைவிட்டு நீக்கியுள்ளது.
அதன்படி, பா.ஜ.க. ஆட்சியில் ஹரியானா மாநிலத்தில் அமைச்சர் பதவி வகித்துவந்த ரஞ்சித் சவுதாலா, ராணியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏவான தேவந்த்ர கடயன், கன்னூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
மேலும், சந்திப் கர்ட் (லட்வா தொகுதி), ஜிலேராம் சர்மா (அசாந்த்), பச்சன் சிங் ஆர்யா (சஃபிடோன்), ராதா ஹல்வாட் (மஹாம்), நவீன் கோயல் (குருகிராம்) மற்றும் கேஹர் சிங் ராவத் (ஹதின்) ஆகியோர் பாஜகவில் இருந்துக்கொண்டே சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதனால், பாஜக இவர்கள் எட்டு பேரையும் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி உத்தரவிட்டுள்ளது.