புதுக்கோட்டையில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேஃபி இணைந்து நடத்திய மிளகாயில் கரும்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சிவாலயா ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் தலைமை வகித்து பேசியது:
தென்கிழக்கு ஆசியா கரும்பேன் தாக்குதலாம் மிளகாய் பயிர் மகசூலில் 85 முதல் 100 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பூச்சி இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
எனவே இந்த பூச்சி தாக்குதலில் இருந்து மிளகாய் பயிரை பாதுகாப்பதற்காக அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு பிரசார யுத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது.
இந்த பிரசார நடவடிக்கைகளில் டிஜிட்டல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எனவே இந்த கரும்பேன் தாக்குதலில் இருந்து மிளகாய் பயிரை காத்திட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
புதுக்கோட்டை நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஆர். தீபக் குமார் கருத்தரங்கை தொடக்கிவைத்து பேசுகையில், மிளகாய் பயிரைத் தாக்கும் கரும்பேனை இயற்கை முறையில் கட்டுப்படுத்த எடுக்கும் இந்த முயற்சி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக்குறிப்பிட்டார்.
புதுக்கோட்டை இணை இயக்குனர் அலுவலக வேளாண் அலுவலர் ந.சண்முகி பேசுகையில், எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேஃபி இணைந்து நடத்தும் மிளகாயில் கரும்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் வெற்றி பெற வேளாண் துறை அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றார்.
கேஃபி உலக டிஜிட்டல் ஒருங்கிணைப்பாளர் மாளவிகா சௌத்திரி, தகவல் தொடர்பு மேலாளர் கிருத்திகா கண்ணன், பயிர் சுகாதார ஆலோசகர் மகேஷ் ஆகியோர் மிளகாய் பயிரில் தென் கிழக்கு ஆசியா கரும்பேன்கள் எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது, என்னென்ன கட்டுப்பாட்டு வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம். வீரமுத்து கருந்தரங்கை வாழ்த்தி பேசினார். இதில், விவசாயிகள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பயிர் மருத்துவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 60 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். பயிர் மருத்துவர் பி. செந்தில்குமார் நன்றி கூறினார்.