முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 (தியாமின்), வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்), வைட்டமின் பி3 (நியாசின்), வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்களும் அடங்கியுள்ளன.
முருங்கை சத்து மிகுந்தது என்பதை பூச்சிகள் கூட அறிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் முருங்கையில் எளிதாக பூச்சிகள் பிடிக்கின்றன. ஆனால் பல படித்த இளைஞர்கள் முருங்கைக் கீரை ஏதோ அந்நிய நாட்டு சக்திபோல விரோதமாக பார்க்கின்றனர்.
அதே பர்கர், பீசா என்றால் வாயைப் பிளக்கின்றனர். எது நன்மையோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனசு தீயதை நாடுகிறது. சரி அதுக்குன்னு நாம் நல்லது சொல்லாமல் இருக்க முடியுமா..?
மழைக்காலம்
மழைக்காலம் என்பதால் முருங்கை சூப் அவ்வளவு நல்லதுங்க. குழந்தைகளுக்கு முருங்கை சூப் கொடுத்தால் சளி, இருமல் தொல்லைகள் இருக்காது.
முருங்கை சூப் எப்படி செய்வது?
இளம் முருங்கைக்கீரையை பறித்து ஒரு கைப்பிடி அளவுக்கு போடுங்கள். அதில் 4 டம்ளர் அளவுக்கு தண்னீர் சேருங்கள். அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்தால் இன்னும் சுவை அதிகம். நனறாக தண்ணீர் கொதித்ததும் கொதித்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு சீரகம், சிறிதளவு மிளகு , இரண்டு பல்லு பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் போல அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள்.
முருங்கை இலை நன்றாக வெந்து அந்த சாறு சுண்டியதும் அதை நன்கு மசித்து வடிகட்டியில் வடித்தால் சூப் ரெடி.
முருங்கை சூப்பில் உள்ள நன்மைகள்:
ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைய உள்ளதால் இது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளை நீக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச் செய்து நோய் பாதிப்பு வராமல் தடுக்கிறது.
வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த சூப் முருங்கை சூப்தானுங்கோ. இது உடலில் சேரும் கொழுப்பைக் கரைத்து எடையை குறைப்பதில் சிறந்த பங்காற்றுகிறது.
தொண்டை வலி, சளி பாதிப்பு, செரிமானமின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.
முருங்கைக் கீரையில் அதிகமாக உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் நீரிழிவு மற்றும் சரும பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. குறிப்பாக முருங்கைக்கீரை இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை தடுக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது. முக்கியமாக, இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் உகந்ததாகும். முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் ஏற்படாது என்றும் தெரிகிறது.
எண்ணற்ற பலன்களைத் தரும் முருங்கை சூப்பை மழைக்காலங்களில் குடிப்பது சிறப்பானதாகும். ஏனெனில் மழைக்காலங்களில் நோய் தொற்று அதிகம் பரவும் என்பதால் முருங்கை சூப்பை தினமும் இல்லை என்றாலும் வாரத்தில் இரண்டு தடவையாவது கட்டாயம் குடிக்கலாம்.
குறிப்பு :
உடல் ரீதியாக வேறு பாதிப்புகள் அல்லது சிகிச்சை எடுப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு முருங்கை சூப் அருந்தலாம்.