Close
நவம்பர் 1, 2024 3:30 மணி

என்னது..? வெள்ளியங்கிரி மலை செல்லும் பக்தர்களுக்கு கட்டணமா..? தமிழக அரசு விளக்கம்..!

வெள்ளியங்கிரி மலை

வெள்ளியங்கிரி மலை செல்லும் பக்தர்களிடம் தமிழக அரசு ரூ.5,099 கட்டணம் விதித்துள்ளது என்று சமீபத்தில் தகவல் பரவியது. இதற்கு தமிழக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பக்தர்கள் மலையேற்றம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு ரூ.5,099 கட்டணம் நிர்ணயித்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு மறுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் “டிரெக் தமிழ்நாடு” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ், 13 கி.மீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பற்றிய விளக்கப்புத்தகம் போன்றவை அடங்கும். இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணத்திற்கு விதிக்கபப்டும் கட்டணம் அல்ல.

கோயில் இருக்கும் இடத்திற்கு முன்பே இந்த பயணம் முடிந்து விடும். மேலும் பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top