Close
நவம்பர் 21, 2024 2:06 மணி

திருவண்ணாமலை மகா தீபத்தன்று கோயிலுக்குள் இவ்ளோ பேர் மட்டுமே அனுமதி..!

கலெக்டர் தலைமையில் நடந்த தீபத்திருவிழா முன்னேற்பாட்டு ஆலோசனைக்கூட்டம்.

திருவண்ணாமலை மகா தீபத்திற்கு கோயிலுக்குள் 11,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மாதம் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. இதற்கிடையே பரணி தீபத்துக்கு கோயில் உள்ளே 7,500 பக்தர்களுக்கும் மகா தீபத்தின் போது 11,500 பக்தர்களுக்கும் கோயிலில் அனுமதி தரப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கார்த்திகை மாதங்களில் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்குகிறது. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் டிசம்பா் 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் , தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். ஒவ்வொரு துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது ,

இந்தாண்டு அண்ணாமலையார் கோயில் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. இந்த கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதற்காக பல்வேறு துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் வரும் டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றம் நடக்கும் நிலையில், தொடர்ந்து டிசம்பர் 10ம் தேதி மகா தேரோட்டமும், டிசம்பர் 13ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. இந்தாண்டு கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் எளிதாகக் கோயிலுக்கு வந்து செல்ல வசதியாகப் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.

எத்தனை பேருக்கு அனுமதி:

கோயில் உள்ளே பரணி தீபத்துக்கு 7,500 பக்தர்களும், மகா தீபத்துக்கு 11,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க 2 ஆயிரம் பக்தர்களுக்கு, மலையேற அனுமதிக்கப் படுவார்கள். அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.

உடல் பரிசோதனை அடிப்படையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் என பரணி தீபத்துக்கு 5,200 பேரும், மகா தீபத்துக்கு 8 ஆயிரம் பேர் அனுமதிக்கப் படுவார்கள்.

ஆன்லைனில்:

இது தவிர பரணி தீபத்திற்கு 500 பேருக்கும் மகா தீபத்துக்கு 1100 பேருக்கும் ஆன்லைனில் அனுமதி தரப்படும் .

கோயிலில் இதய மருத்துவரைக் கொண்ட 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். மொத்தம் 85 மருத்துவக் குழுக்கள் பணியில் இருப்பார்கள்.

மேலும், அண்ணாமலையார் தேர் வெள்ளோட்டம் மற்றும் மகா தேரோட்டத்தின் போது பாதுகாப்பு கருதி மாட வீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும்” என்றார்.

கார்த்திகை தீபத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் இந்த ஆண்டு விரிவாக மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது முதல் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், டிஆர்ஓ ராமபிரதீபன், இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top