கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் காய்ச்சல் பிரிவு, டெங்கு பிரிவு மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்கு பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கடலூர், சிதம்பரம். புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் 73.39 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
15 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.12.08 கோடி மதிப்பீட்டிலும், 24 புதிய துணை சுகாதார கட்டடங்கள் ரூ.7.20 கோடி மதிப்பீட்டிலும் பல்வேறு புதிய கட்டடங்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் கோரிக்கையை ஏற்று மஞ்சக்கொல்லையில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஓரங்கூர் பகுதியில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடக் கட்டுமானப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 4,089 நபர்களுக்கும், அக்டோபர் 5,583 நபர்களுக்கும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 3.767 நபர்களுக்கும், அக்டோபர் மாதத்தில் 4.240 நபர்களுக்கு மட்டுமே காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்புகளை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்த அளவிலே காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1.980 நபர்களுக்கும். அக்டோபர் 3.333 நபர்களுக்கும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1.683 நபர்களுக்கும். அக்டோபர் மாதத்தில் 1,597 நபர்களுக்கு மட்டுமே உள்ளது.
அந்த வகையில் காய்ச்சல் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்த அளவிலே இந்த ஆண்டு கடலூரில் இருந்து கொண்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களின் போது காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு பாதிப்புகள் என்பது இயல்பு. அந்தவகையில் தான் தற்போது காய்ச்சல் வந்திருக்கிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கபட்டவர்களை தற்போது நேரடியாக சென்று பார்வையிடப்பட்டது. அனைவரும் நன்றாக உள்ளனர். இரண்டு, மூன்று நாட்களில் சரியான சிகிச்சைப்பெற்று வீடு திரும்புகின்றனர்.
2012ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பினால் தமிழ்நாட்டில் 66 நபர்களும், 2017 ஆம் ஆண்டு 65 நபர்களும் என இந்த இரண்டு ஆண்டுகளில் தான் டெங்குவால் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை போன்ற பல்வேறு சேவைத் துறைகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து நடத்துப்பட்டுவரும் ஆய்வுகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளால் டெங்கு இறப்பு மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது.
இந்த ஆண்டு இதுவரை 8 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதுவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருப்பது அல்லது காய்ச்சல் பாதிப்பின் போது மருத்துவ உதவியை நாடாமல் தன்னிச்சையாக மருத்தும் பாரத்துக்கொண்டதன் விளைவுகளால் ஏற்பட்டுள்ளது.
முன்பு அரசு மருத்துவமனையில் ஏற்படும் டெங்கு பாதிப்புகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கடந்து மூன்றரை ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையையும் இணைத்து பட்டியிலிட்டு கண்காணித்து கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 4,031 மருத்துவமனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பினால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத நிலையை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிக அளவிலான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளதால், காய்ச்சல் போன்ற பாதிப்பிற்கு உடனடியாக மருத்துவமனையை அனுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இந்த துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்பட்சத்தில் உயிரிழப்புகள் இல்லாத பூஜ்ஜிய நிலையையெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்னாள் 1,021 மருத்துவப் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது 2026ஆம் ஆண்டு வரை நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை கணக்கிட்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் (Medical Services Requirement Board) வாயிலாக அரசின் உரிய வழிகாட்டுதலின்படி தேர்வு நடத்தப்பட்டு 2,553 பேர் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது என தெரிவித்தார்.