Close
நவம்பர் 22, 2024 3:49 மணி

ஓய்வூதியத்தில் மகளுக்கு உரிமை இல்லையா..? அரசு விளக்கம்..!

கோப்பு படம்

அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றபின்னர் ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அதுகுறித்த விளக்கத்தினை அளித்துள்ளது.

அது பற்றிய விளக்கங்களை அளிப்பதற்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை அலுவலகம் ஒரு குறிப்பாணையை வெளியிட்டுள்ளது.

அந்த குறிப்பாணையின்படி, CSS (ஓய்வூதியம்) விதிகள், 2021ன் விதி 50 (15)ஐ மேற்கோள்காட்டியுள்ள அலுவலக குறிப்பாணை, ஒரு அரசு ஊழியர் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், அவர் குடும்பத்தின் விவரங்களை படிவம் 4ல் நிரப்பி அலுவலகத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். அதில் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகள் (குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தாலும், இல்லை என்றாலும்) ஆகியோருடன் தொடர்புடைய அனைத்து விவரங்களும் குறிப்பிடப்படவேண்டும்.

மேலும், அரசுப் பணியாளர், பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஓய்வூதிய ஆவணங்களுடன் மீண்டும் படிவம் 4ல் குடும்பத்தின் தற்போதைய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் இருந்து மகளின் பெயரை நீக்குவது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி குறிப்புகள் வந்ததாக அலுவலக குறிப்பாணை தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்திற்கு தகுதி உடையவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெளிவுபடுத்தியுள்ளது. ​​

அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரது மகள் கருதப்படுகிறார். ஆகையால், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் மகளின் பெயர் சேர்க்கப்பட்டுத் தான் இருக்கும். குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி, ஓய்வூதியம் பெறுபவர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு தற்போதுள்ள விதிகளின்படி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளின்படி குழந்தைகளில் ஓய்வூதியத்தில் யாருக்கு முதல் உரிமை?

ஓய்வூதியம் பெறக்கூடிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் இறந்துவிட்டால், கணவரை இழந்த விதவை மனைவி அல்லது மனைவியை இழந்த கணவன் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் பெற இறந்த நபரின் கணவனோ அல்லது மனைவியோ இல்லாதபோது, அது குழந்தைகளுக்குச் செல்கிறது.

25 வயதுக்கு உட்பட்டவர்கள் அல்லது திருமணம் ஆகும் வரை அல்லது ரூ. 9,000/- + DA என்ற மாத சம்பளத்திற்கு மேல் ஊழியரின் குழந்தைகள் சம்பாதிக்கத் தொடங்கும்போது, இவற்றில் எது முதலில் நடக்கிறதோ, அது வரை குடும்ப ஓய்வூதியம் இறந்த ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

அரசு ஊழியரின் மகன் அல்லது மகள், மனநலம் குன்றியவராகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருந்தால், 25 வயதை எட்டிய பிறகும் அவர் வாழ்வாதாரம் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படும்.

ஓய்வூதிய விதிகளின்படி, அரசு ஊழியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருந்தால், குடும்ப ஓய்வூதியத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top