Close
நவம்பர் 14, 2024 5:56 காலை

தனியார் நிறுவன பால்விலை உயர்வு : பால் உற்பத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை..!

ஆரோக்யா பால்

தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா பால் ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆரோக்யா பால் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கும் என்பதால் தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள் விலை, பால் முகவர்களுக்கான பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகை, வாகன எரிபொருள் விலை உள்ளிட்டவற்றின் உயர்வு இருக்குமாயின் ஆரோக்யா பால், தயிர் விற்பனை விலை உயர்வு என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை படு வீழ்ச்சியில் உள்ள நிலையில், ஆவினை விட லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைந்த விலை கொடுத்தே தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்து வருகின்றன. இந்த நிலையில் ஆரோக்யா நிறுவனத்தின் தற்போதைய இந்த விற்பனை விலை உயர்வு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். (ஆவின் கொள்முதல் விலை 35.00+3.00= ரூ. 38.00, தனியார் கொள்முதல் ரூ.28 முதல் அதிகபட்சம் ரூ.33 வரை மட்டுமே).

அத்தியாவசியப் உணவுப் பொருளாக விளங்கும் பாலுக்கு, தனியார் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. ஆனால் அதிகாரம் உள்ள மத்திய அரசு பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் நலன் குறித்து சிந்திக்கத் தவறியதால்தான் இது போன்று தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படும் நிலை உருவாகிறது.

குதிரையின் கடிவாளம் பாகனிடம் இல்லாது போனால் எவ்வாறு அந்தக்குதிரை தறிகெட்டு ஓடுவதுபோல தனியார் பால் நிறுவனங்களை கட்டுக்குள் வைக்க ஆட்சியாளர்கள் தவறிவிடுவதால் தனியாருக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்ளுக்கு உரிய விலை கிடைக்காமலும், நுகர்வோராகிய பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிலையும் நீடித்து வருகிறது.

இதனால் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகள் வேறு தொழிலையோ அல்லது வேறு வேலைகளையோ தேடிச்செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி படிப்படியாக குறைந்து பால் உற்பத்தியே பாதிக்கப்படும் அபாயம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே மத்திய, மாநில அரசுகள் இனியாவது விழித்துக் கொண்டு கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல தனியார் பால் நிறுவனங்களையும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட அல்லது அவற்றின் குறைந்தபட்ச பால் கொள்முதல் விலை, அதிகபட்ச பால் விற்பனை விலையை நிர்ணயம் செய்ய தகுந்த சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top