குஜராத்தில் அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதிச்சடங்கு செய்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருபவர் சஞ்சய் போலாரா. இவர் குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள குடும்பத்தின் விவசாய நிலத்தில் தனது அதிர்ஷ்ட காருக்கு பிரமாண்டமான அடக்கம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதில், மத பிரமுகர்கள், ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த காரை 15 அடி ஆழமான பள்ளத்தில் தள்ளப்பட்டு இறுதிச் சடங்கு செய்துள்ளனர். சுமார் 1500 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ரூ.4 லட்சத்துக்கும் மேல் செலவானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சஞ்சய் போலாரா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகையில், எதிர்கால சந்ததியினருக்கு நீடித்த நினைவை உருவாக்குவதற்காக இந்த நிகழ்வை நடத்தியுள்ளோம். இந்த கார் தங்களது குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.
வேகன் ஆர் எனப்படும் இந்த காரை ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். அது குடும்பத்திற்கு செழிப்பையும் தொழிலில் வெற்றியையும் கண்டது. இது மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் மரியாதை கிடைக்கச் செய்ததது. அந்த வாகனம் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அதிர்ஷ்டமாக அமைந்திருந்தது. எனவே, அதை விற்பதற்குப் பதிலாக, எனது பண்ணையில் சடங்கு செய்து புதைத்துள்ளேன் என தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த காரின் பிரியாவிடை நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.