Close
நவம்பர் 22, 2024 9:24 காலை

ஆண் டைலர்கள் இனிமேல் பெண்களுக்கு அளவு எடுக்கக் கூடாது..! நமக்கு எப்போ வரும்..?

பெண்ணுக்கு அளவெடுக்கும் ஆண் டைலர் -கோப்பு படம்

இனிமேல் பெண்களுக்கு ஆண் டைலர்கள் அளவெடுக்கக் கூடாது. ஜிம்மிலும் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்பொருட்டு சில தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த மாநிலத்தின் மகளிர் ஆணையம் சில முன்மொழிவுகளை பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, ஆண் தையல்காரர்கள் இனிமேல் பெண்களுக்கு அளவு எடுக்கக்கூடாது. அதேபோல ஜிம் அல்லது யோகா மையம் போன்ற இடங்களில் ஆண்கள், பெண்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொது மற்றும் வணிக மையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிப் பேருந்துகளில் பெண் பாதுகாப்புப் பணியாளர்களும், பெண்கள் துணிக்கடைகளில் பெண் பணியாளர்களும் இருக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரைகள் லக்னோவில் அக்டோபர் 28ம் தேதி அன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் ஆணைய உறுப்பினர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

மகளிர் ஆணைய உறுப்பினர் மனீஷா அஹ்லாவத் கூறும்போது :-

இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைதான் நடந்துள்ளது. இந்த முன்மொழிவுகளில் எவையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஒப்புதல் கிடைத்ததும், இந்த முன்மொழிவுகளை அமல்படுத்துவதற்கான கொள்கையை உருவாக்க அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார். மேலும், ஷாம்லி மாவட்டத்தில் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பெண்களுக்கு ஜிம்கள், நாடகம் மற்றும் யோகா மையங்களில் கட்டாயமாக பெண் பயிற்சியாளர்கள் அல்லது பெண் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தபப்ட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணிக்கடைகளில் பெண்களின் அளவீடுகளை எடுக்க, CCTV கண்காணிப்புடன் பெண் தையல்காரர்களைக் கொண்டு அளவீடுகள் எடுக்கவேண்டும். அதற்காக பெண் தையல்காரர்களை நியமிக்க வேண்டும். கூடுதலாக, பயிற்சி மையங்களில் CCTV கண்காணிப்பு மற்றும் முறையான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும்.

பெண்களுக்கான குறிப்பிட்ட ஆடைகள் மற்றும் அணிகலன்கள் விற்கும் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு உதவ பெண் ஊழியர்களையும் நியமிக்க வேண்டும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top