Close
நவம்பர் 21, 2024 6:50 மணி

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல் : 24 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான், பலூச்சிஸ்தான் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலை படை தாக்குதலில் சிதறுண்டு கிடக்கும் ரயில் நிலையம்.

பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா ரயில் நிலையத்தில், பெஷாவருக்கு செல்லும் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாராக நின்றது. அப்போது, ரயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில், சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்கள். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குண்டு வெடித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அதில், பலூச்சிஸ்தான் விடுதலை அமைப்பினர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆகும். அதேபோல் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 46-க்கும் மேல் அதிகரித்துள்ளது. தாக்குதல் நடந்த போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் என்பது ரயில் நிலைய சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்றுவதற்கு பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது.” என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top