Close
நவம்பர் 14, 2024 4:50 காலை

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..! முக்கிய பிரமுகர்கள், திரைத்துறை அஞ்சலி..!

டெல்லி கணேஷ் -கோப்பு படம்

சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் டெல்லி கணேஷ். இவரது பெயருடன் டெல்லி ஒட்டி இருப்பதால் அவர் டெல்லிக்காரர் என்று நிறைய பேர் நினைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் 1944-ம் ஆண்டு பிறந்தவர். அவரது குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் சினிமாவில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் சாதித்து இருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருந்த டெல்லி கணேஷ், 1964-ம் ஆண்டு இந்திய விமானப் படையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு கண்டிப்பான அதிகாரியாக இருந்த டெல்லி கணேஷ் நடிகராக மாறியதே ஒரு தனிக் கதை.

போரில் அடிபட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவர்களுக்கு பொழுதுபோக்கு என எதுவுமே அந்த காலகட்டங்களில் இல்லாமல் இருந்தது.

அதன் காரணமாக தரைப்படை, கப்பல்படை, விமானப்படை முப்படையும் இணைந்து அவர்களுக்கு பொழுதுபோக்குக்காக நாடகங்கள் நடத்த முடிவு செய்தனர். அந்த சமயத்தில் டெல்லி கணேஷ், தன்னுடைய சக அதிகாரிகள் போல் மிமிக்ரி செய்வது அனைவருக்கும் பிடிக்கும் என்பதால், அவரிடம் காமெடியாக ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து போரில் அடிபட்டவர்களுக்காக ஒரு ஷோ பண்ண வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். அப்படி தான் டெல்லி கணேஷ் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

மகன் மஹாதேவன் கணேஷுடன் டெல்லி கணேஷ்

போர் வீரர்களுக்காக வள்ளி திருமணம் நாடகத்தை போட்டிருக்கிறார்கள். அப்போது மேடையில் நடிக்கும் போது, ஒரு சீனில் சக வீரர் டயலாக் பேசியதும், டெல்லி கணேஷ் டயலாக்கை மறந்திருக்கிறார். அதை சமாளித்த டெல்லி கணேஷை சக வீரர் அடித்திருக்கிறார். உடனே டெல்லி கணேஷ் சிரித்துக்கொண்டு தன்னுடைய சமாளிப்பால் அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டாராம். அப்போதே நீ பெரிய நடிகன் ஆவாய் என்று சக வீரர்கள் பாராட்டினார்களாம்.

டெல்லி கணேஷ் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது இவர் நாடகங்களில் நடித்ததை கேள்விப்பட்டு அவரின் நண்பரான காத்தாடி ராமன், டௌரி கல்யாணம் என்கிற நாடகத்தில் டெல்லி கணேஷை நடிக்க வைத்திருக்கிறார். அதில் திறம்பட நடித்ததால் டெல்லி கணேஷுக்கு தொடர்ந்து நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்திருக்கிறது. இதனால் 1974-ல் தன்னுடைய விமானப் படை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நடிகராக மாறிவிட்டார் டெல்லி கணேஷ்.

தர்ஷன பாரத நாடக சபா என்கிற டெல்லி நாடக குரூப்பில் இவர் ஒரு உறுப்பினராக இருந்ததால் அங்கு நிறைய நாடகங்களில் நடித்து வந்தார். அந்த குழுவில் இருந்ததால் இவரை அனைவரும் செல்லமாக டெல்லி கணேஷ் என்றே அழைத்தனர்.

சதாபிஷேகம் செய்தபோது மனைவியுடன் டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் முதல் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் தான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லாமல், தனக்கு கிடைத்த கேரக்டர்களில் எல்லாம் சிறப்பாக நடித்தார்.

குறிப்பாக விசு மற்றும் கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் இவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது. அவ்வை ஷண்முகி, மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. டெல்லி கணேஷின் நடிப்புக்கு மிக முக்கியமான படம் பசி. 1979-ல் ரிலீஸ் ஆன அந்தப் படத்தில் சென்னை பாசை பேசி நடித்திருப்பார் டெல்லி கணேஷ். இந்த படத்திற்காக அவருக்கு மாநில அரசு விருதும் கிடைத்தது.

டெல்லி கணேஷ் காமெடியனாகவும், குணச்சித்திர கேரக்டர்களிலும் சிறப்பாக நடித்திருந்தாலும், வில்லனாகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார். விசுவின் சிதம்பர ரகசியம், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் இவர் வில்லனாக நடித்தார்.

இவர் நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்தன் தமிழில் நடிக்கும் படங்களுக்கு இவர் தான் டப்பிங் வாய்ஸ் கொடுப்பாராம். இதுதவிர சிரஞ்சீவி, பிரதாப் போத்தன் போன்ற நடிகர்களுக்கும் இவர் டப்பிங் பேசி உள்ளார்.

400 படங்களுக்கு மேல் நடித்துள்ள டெல்லி கணேஷ், தமிழக அரசின் விருது, கலைமாமணி விருது போன்ற விருதுகளையும் வாங்கி உள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்த டெல்லி கணேஷ் நவம்பர் 9-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஒரு பேரிழப்பு.

டெல்லி கணேஷுக்கு 80 வயது. அவரது மனைவி தங்கொம். அவர்களது ஒரே மகன் மஹாதேவன் கணேஷ். அவரும் ஒரு நடிகர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top