கள்ளக்குறிச்சியில் இருந்து இந்திலி வழியாக அரசுப் பேருந்து ஒன்று ஈரியூர் சென்றுகொண்டிருந்தது. மேலூர் கிராமம் அருகே சென்ற போது, ஈரியூர் கிராமத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் இடது பக்கமாக திருப்பியுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்துது அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் பயணம் செய்த மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தபினார்கள்.
பலத்த காயமடைந்த 5 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் லேசான காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பேருந்து ஓட்டுனர் குடித்துவிட்டு ஓட்டியதாகவும், கள்ளக்குறிச்சியில் இருந்து வரும்போது அதிவேகமாகவும் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார், போக்குவரத்தை சரி செய்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.