தமிழக அரசியல் களம் மாறுகிறதா என்ற ஒரு கருத்தினை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர். அந்த கருத்துக்கு ஒரே காரணம் அதிமுக பொதுச் செயலாளரின் சமீபத்திய பேட்டியில் கூறிய ஒரு வார்த்தை மட்டுமே.
அதிமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க., பா.ம.க., கூட்டணியுடன் இணைந்து சந்தித்தது. அதில் 75 எம்.எல்.ஏ தொகுதிகளில் வெற்றிபெற்றது. பின்னர் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ,கவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.
அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதனால் அதிமுகவுக்குள் புகைச்சல் ஏற்பட்டது. அதிமுக தோல்விக்கு கட்சி பிரிந்து கிடப்பதே காரணம். அதனால் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவேண்டும் என்று அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறியதுடன், பல்வேறு கட்டங்களாக எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பிரிந்தவர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று தடாலடியாக அறிவித்துவிட்டார்.
திமுக தேர்தல் பணி
இந்த நிலையில் திமுக 2026ம் ஆண்டு தேர்தலை சந்திப்பதற்கு இப்போதே தொகுதியில் களப்பணிகளை தொடங்கிவிட்டது. திமுக நிர்வாகிகளிடம் பேசும்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு குறையாமல் கைப்பற்றவேண்டும் என்று கூறியுளளார்.
இதற்கிடையே அதிமுக விசிக மற்றும் தவெக உடன் கூட்டணி அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி திமுகவுடன் மட்டும்தான் என்று உறுதியாக கூறிவிட்டார்.
திருமாவளவன் பேச்சு அதிமுகவுக்கு அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. ஏனெனில் அதிமுக, விசிக, தவெக கூட்டணி அமைந்து இருந்தால் அதிமுக கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக இருந்திருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்குப்போட்டிருந்தார். ஆனால், திருமாவளவனின் பதில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
இந்தநிலையில் திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய பதில் பாஜகவுக்கு கூட்டணிக்கதவுகள் திறக்கப்பட்டிருப்பதை காட்டுவதாக உள்ளது. செய்தியாளர் சந்திப்பில், ‘வரும் தேர்தலை சந்திப்பதற்கு பாஜக இல்லாத கூட்டணிக்கு அதிமுக தயாராகிவிட்டதா?’ என்று கேட்டனர்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘ தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். அதிமுகவின் தலைமையை ஏற்று ஒத்த கருத்துடைய கட்சிகள் வருவார்கள் என்றால் கூட்டணியில் இணைந்து திமுகவை எதிர்த்து நின்று ஆட்சியில் இருந்து வெளியேற்றவேண்டும். அதுதான் எங்கள் நோக்கம்’ இவ்வாறு கூறி இருந்தார்.
இந்த பதில் பலரது கவனத்தைப் பெற்றுள்ளதுடன் பாஜவுடன் கூட்டணிக்கே வாய்ப்பில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் நெருங்கும்போது முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளது பாஜகவை கூட்டணியில் இணைப்பது குறித்த முடிவில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களை வெல்லவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான கூட்டணி அமைத்து திமுகவை எதிர்க்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளது தெரிகிறது.