தமிழக அரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்போம் என விஷம பிரசாரங்களை சில அமைப்புகள் எடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற மாட்டேன் என ஒருபோதும் தமிழக முதல்வர் கூறியதில்லை என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்..
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார் .
இதனை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து இந்த இரு அமைப்புகளும் ஒருங்கிணைந்து பல்வேறு போராட்டங்களையும் கோரிக்கைகளையும் அரசுக்கு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாத திமுக அரசை வரும் காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்போம் என கூறி சில அமைப்புகள் தெரிவித்து வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களை முந்தைய அரசு அவமானப்படுத்தியது அனைவருக்கும் தெரியும். மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த மற்றும் அளிக்காத செயல்களை செயல்படுத்தி வருகிறது.
இதுவரை பல்வேறு முறை சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சந்தித்து வரும் நிலையில் தற்போது வரை நிதி ஆதாரங்கள் சரியான பின் அனைத்தும் சரி செய்யப்படும் என தெரிவித்து வருகிறார்.
ஒரு போதும் அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இயலாது என்று செய்தி குறிப்பிலோ அல்லது நேரிலோ அல்லது கூட்டங்களிலோ தெரிவித்ததில்லை எனவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற ஆவலுடன் அனைவரும் காத்திருக்கும் நிலையில் சில விஷம பிரசாரங்கள் ஊடகங்களில் வெளிவருவது முற்றிலும் தவறானது எனவும், அதுபோல் யாரும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க மாநில நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.