Close
நவம்பர் 21, 2024 3:20 மணி

போலி ஆவண முறைகேடு:  44 மாணவர்கள் மீது  வழக்குப் பதிவு

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு ஜிப்மர் மற்றும் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி உள்பட 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.

இந்த எட்டு மருத்துவக் கல்லூரிகளில் லட்சுமி நாராயணா, ஆறுபடைவீடு, மற்றும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகம் என்பதால் நேரடியாக எம்.சி.சி. (மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.

மீதமுள்ள ஐந்து மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1070 மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளது. இதில் 2024- 25 -ம் ஆண்டுக்கான அரசு இட ஒதுக்கிடாக 432 இடங்கள் பெறப்பட்டது. இது மட்டுமின்றி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை தவிர மீதமுள்ள நான்கு கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக 116 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கியது. இதன்படி மூன்று கட்ட கலந்தாய்வில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

என். ஆர். ஐ. இட ஒதுக்கீட்டில் 116 இடங்களுக்கு 186 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் இவர்களுக்கு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்து 55 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்டமாக 61 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் 61 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 44 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள 17 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை இதில் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற 44 மாணவர்களும் கொடுத்த சான்றிதழ்கள் போலி ஆவணங்களை என தெரியவந்தது. இதனையடுத்து புதுச்சேரி சென்டாக் கன்வீனர் ஷெரின் ஆன் சிவன், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த லாஸ்பேட்டை போலீசார் 44 மாணவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 44 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவ கல்லூரியில் சேர முயற்சி செய்த 44 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாணவர்களை மட்டுமின்றி இவர்களுக்கு போலி சான்றிதழ் அளிக்க உதவிய இடைத்தரகர்கள் மற்றும் பெற்றோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top