Close
நவம்பர் 15, 2024 9:19 காலை

எங்கே செல்லும் இந்தப்பாதை…? குழப்பத்தில் அ.தி.மு.க..?!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-கோப்பு படம்

வரும் 2026ல் யார் எதிரி என்பதை நிர்ணயிப்பதில் அ.தி.மு.க..,வில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பு, விஜய்யின் அரசியல் பிரவேசம், வருமான வரித்துறை ரேடாரில் சிக்கிய சேலம் இளங்கோவன் எனப் பல அரசியல் `பரபர’ சம்பவங்களுக்குப் பிறகு, பெரும் எதிர்பார்ப்போடு கடந்த நவம்பர் 6ம் தேதி கூடியது அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

“கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறார் எடப்பாடி பழனிசாமி” எனக் கூட்டத்துக்கு முன்பே பரபரப்பு பற்றிக்கொண்டது. அதற்கேற்ப கூட்டத்தில், “தி.மு.க-வைத் தவிர வேறு யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

வலுவான கூட்டணியை நான் அமைத்துத் தருகிறேன்” என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் எடப்பாடி. அதுவே இப்போது சர்ச்சையாக வெடித்து, கட்சிக்குள் புகை கிளம்பத் தொடங்கியிருக்கிறது.

“தி.மு.க-வைத் தவிர வேறு யாரையுமே விமர்சிக்க வேண்டாம்’ என்றால், பா.ஜ.க-வுடன் மீண்டும் உறவைப் புதுப்பிக்கப்போகிறாரா.? பா.ஜ.க-வுடன் உறவு வைத்துக்கொண்டால், தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகளை எப்படி நம் பக்கம் வளைக்க முடியும்?

பா.ஜ.க-வுடன் உறவு என்றால் விஜய்கூட வர மாட்டாரே? தி.மு.க-வைத் தவிர, பா.ஜ.க உட்பட எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் கூட்டணி அழைப்பு விடுக்க நினைக்கிறார்,இ.பி.எஸ். நான்கு முனைகளிலிருந்து ஐந்து முனைப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

இந்த நிலையில், லாஜிக்கான எந்த அரசியல் வியூகமும் இல்லாமல் எல்லோருக்கும் அழைப்பு விடுக்க நினைப்பது, தாம் அழைப்பு விடுத்தால் எல்லோரும் வந்து விடுவார்கள் என்று நினைப்பது என வெறுங்கையில் முழம் போடுகிறார் இ.பி.எஸ்” என்கிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள்.

‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை’ என்பது உண்மைதான். ஆனால், போருக்குத் தயாராகும் போது, யார் நம் நண்பன்..? யார் நம் எதிரி என்பதில் ஒரு முடிவும் தெளிவும் வேண்டும்.

இல்லையென்றால், படைகள் சிதறி, கொடியும் கோட்டையும் சுக்கு நூறாகிவிடும். அப்படித்தான், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பகை தெரியாமல் கத்தி வீசி, ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தோம். அதே பாணியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் படை திரட்டுகிறார் இ.பி.எஸ். கட்சி என்ன கதி ஆகப்போகிறதோ..?” எனக்கூறினர்.

“2026 தேர்தல் என்பது, தமிழகம் இதுவரை காணாத ஒரு கடுமையான தேர்தலாக இருக்கப்போகிறது. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் அ.தி.மு.க கட்சித் தலைமை, இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது..? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது..? யாரை இணைத்து, யாரை விலக்கி வைக்கப்போகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்” எனக் கேட்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். தன் கட்சிக்காரர்களுக்குத் தெளிவான பதிலைச் சொல்வாரா எடப்பாடி?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top