சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, விசிகே துணைப் பொதுச் செயலாளர் தொடர்புடைய இடங்கள், ஹரியானாவில் ஃபரிதாபாத், பஞ்சாபின் லூதியானா மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா ஆகிய இடங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, போயஸ் கார்டன் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது.
கோவையில் 3 இடங்களில் காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை தொடர்ந்தது. மார்ட்டின் அலுவலகம், துடியலூர் அருகே வெள்ளக்கிணற்றில் உள்ள அவரது வீடு, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ட்டினுக்கு எதிரான விசாரணையைத் தொடர அமலாக்கத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு, கேரளாவில் அரசு லாட்டரியை மோசடி செய்ததால் சிக்கிம் அரசுக்கு ரூ.900 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் மார்ட்டின் மீதான வழக்கில் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
மார்ட்டின் பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நாட்டில் சிக்கிம் லாட்டரிகளின் முதன்மை விநியோகஸ்தராக உள்ளது குறிப்பிடத்தக்கது.