விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேலம் விற்பனைக்குழு சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைத்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, கொங்கணாபுரம், மேச்சேரி, ஓமலூர், எடப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 15,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
இவற்றில் மிகக்குறைந்த வாடகையில் விவசாயிகள் 100 கிலோ விளைபொருளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.00.10 பைசா மற்றும் வியாபாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.00.20 பைசா என்ற விகிதத்தில் தங்களது விளைபொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம். மேலும், விவசாயிகள் சிறப்பு சலுகையாக இரண்டு வாரம் வரை வாடகையின்றி தங்களது விளைபொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
விவசாயிகள் சேலம் விற்பனைக்குழு மூலம் 5% வட்டியில் ரூ.5 இலட்சம் வரை பொருளீட்டுக்கடன் பெறும் வசதி, வணிகர்கள் 9% வட்டியில் ரூ.2 இலட்சம் வரை பொருளீட்டுக்கடன் பெறும் வசதி உள்ளது.
சேலம் விற்பனைக்குழுவின் 10,600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 8 சேமிப்பு கிடங்குகள் மத்திய அரசின் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (WDRA) தரச்சான்றிதழ் பெற்றுள்ளன. இந்த கிடங்குகளில் இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு வங்கிகள் மூலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உச்சவரம்பின்றி 9% வட்டி விகிதத்தில் கடன் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் விற்பனைக்குழு சேமிப்பு கிடங்குகள் தரம் கெடுதல், நெருப்பு, திருட்டு ஆகியவற்றியிலிருந்து காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இருப்பு வைத்த விளைபொருட்களை பூச்சிகள், கரையான் மற்றும் நோய் தாக்காமல் பாதுகாக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. உலர்களங்கள் மற்றும் அணுகுசாலை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் முறைப்படி கிட்டங்கிகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிடங்குகளில் தங்களது விளைபொருட்களை மழைக்காலங்களிலும், விலைவீழ்ச்சி காலங்களிலும் சேமித்து பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு சேலம் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் அவர்களை 0427-2906927 மற்றும் 90432 84991 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.