தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் 14 வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், 14 வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜனவரி 8 முதல் 11-ம் தேதி வரை சென்னையில் கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் 40-க்கும் மேலான நாடுகளின் ஆயிரத்திற்கும் மேலான வெற்றித் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு துறைகளின் முக்கிய தமிழ் ஆளுமைகள், தமிழகத்தின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழர்கள் உள்ளூரில் செய்யும் தொழில்களை உலகமயப்படுத்துவது, ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் தமிழர்களுடைய உலகளாவிய வலை பின்னல்களை வசப்படுத்துவது, தொழில் வணிக வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான மூலதனத்தை திரட்ட வழிகாட்டுவது மாநாட்டின் நோக்கம்.
மாநாடு மூலமாக வடகிழக்கு இலங்கை, மலையகம், இந்திய தமிழகம் மற்றும் மலேசிய நாடுகளில் தொழில் தொடங்க விரும்பும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் 20 பேருக்கு தொடக்க நிலை நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், பெண்களுக்கு சிறப்பு முன்னுரிமையும் அளிக்கப்பட உள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் www.tamilrise.org என்ற இணையதளம் மூலமாகவும், 9150060032, 9150060035 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.