திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த 400.க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்கிய பட்டாக்களை போலியாக ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் பட்டாவை எங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வட்டத்திற்குட்பட்ட ஒரக்காடு பகுதியில் வாழ்ந்த 9 நரிக்குறவர் குடும்பங்களுக்கு 1971- ஆம் ஆண்டு அன்றைய கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது பொன்னேரி தொகுதி ஒரக்காடு அல்லிமேடு பகுதியில் 45ஏக்கர் நிலத்தினை நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்துள்ளது
இந்த 45 ஏக்கர் நிலத்தினை நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த ஆசிரியராக பணிபுரிந்த ஒருவர் பாதுகாத்து வைத்து பின்னர் மீண்டும் இடத்தினை ஒப்படைப்பதாக கூறி ஏமாற்றியதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து நரிக்குறவர் குடும்பங்களிடமிருந்து கைநாட்டு பெற்று 45 ஏக்கர் நிலத்தையும் அபகரித்ததாக கூறப்படும் நிலையில் தற்பொழுது 175 நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கும் பகுதியை உடனடியாக காலி செய்து தர வேண்டும் ஆசிரியர் ரகுபதி ஞானசுந்தரியின் மகளான சித்ரா என்பவர் தங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை விட்டு நரிக்குறவர்கள் வெளியேற்ற வேண்டும் என சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட நரிக்குறவர் மக்கள் எங்கள் நிலத்தை மீண்டும் எங்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொன்னேரி வட்டாட்சியர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருவதாகவும்
ஆனாலும் எந்தவித பயனும் இல்லை என்பதால் இன்று சுமார் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் தங்களின் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் எங்கள் முன்னோர்களுக்கு அரசு வழங்கிய சுமார் 45 ஏக்கர் நிலத்தினை உடனடியாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்க வேண்டும். அதுவரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு கிளம்ப மாட்டோம் என்று கூறியுள்ள நரிக்குறவ மக்கள், தங்கள் குழந்தைகள் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சி கடிகளில் இருந்து பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலையை மாற்ற தமிழக அரசு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களிடம் இருந்த எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென நடுரோட்டில் அவர்கள் வந்து அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.