Close
நவம்பர் 18, 2024 5:42 மணி

வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மகன்.. கருணை கொலைக்கு அனுமதி கேட்ட முதியோர்

திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே அகரமேடு மெயின் ரோட்டில் தியாகராஜன்(வயது 74) மற்றும் மல்லிகா(வயது 64) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தியாகராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், தனது மனைவி மல்லிகா பெயரில் பல சொத்துக்களை வாங்கியுள்ளார். மேலும் மனைவி பெயரில் ஒரு வீட்டையும் கட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த தியாகராஜன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், மகன் ரவிக்குமாரை வெளிநாட்டிற்கு தனது சொந்த செலவில் வேலைக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ரவிக்குமார் பெற்றோர்களுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கேட்டதற்கு சம்பளம் கொடுக்காமல் அவரது முதலாளி ஏமாற்றி விட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் வருடம் ரவிக்குமார் சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, 2019 ஆம் வருடம் தனது தாயார் மல்லிகா பெயரில் உள்ள வீடு உள்ளிட்ட சொத்துக்களை தனது பெயருக்கு வலுக்கட்டாயமாக மாற்றி எழுதி வாங்கியுள்ளார்.

தற்போது ரவிக்குமார் கொல்லுமாங்குடி பகுதியில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் பல வீடுகளை கட்டி வாடகைக்கும் விட்டுள்ளார்.

தற்போது பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில், அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

மல்லிகா அவரது பெயரில் உள்ள வீட்டை மீட்டுத் தருமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மல்லிகா, தனது சொந்தமான சொத்தினை வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்துகொண்டு அவரையும், அவரது கணவரையும் வீட்டை விட்டு அனுப்பி வைத்த ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து, பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் சொத்துக்களை மீட்டு தராத காரணத்தினாலும், மேலும், தங்களை தாங்களே பராமரித்துக் கொண்டு வாழ வழியின்றி தன்னையும், தனது கணவரையும் கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top