Close
நவம்பர் 18, 2024 5:52 மணி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சூழல் இல்லை- திருமாவளவன்

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில், முகமது ஜின்னா எழுதிய ‘நோபல் ஜர்னி’  நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எனும் தலைப்பில் கருத்தரங்கை நடத்திய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அகில இந்திய அளவில் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட கூட்டணி ஆட்சி கடந்த 1977ம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைவது அவசியமானது என்ற கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதற்கான சூழல் இன்னும் தமிழகத்தில் கனியவில்லை என்பது தான் உண்மை. இப்போது எல்லாக்கட்சிகளும் இதைப்பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று திமுக அல்லது அதிமுக கூறுவது நடைமுறைக்கு சாத்தியமானது. ஆனால் கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் தங்கள் விருப்பத்தை கூறுவது தற்போதைய சூழலில் நடைமுறைக்கு சாத்தியமானதா? என்ற கேள்வி எழுகிறது.

அதிமுக கூறுவதால் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியமற்றது என்பதே உண்மை. கூட்டணி ஆட்சியை அதிமுக முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்த பிறகே அதுகுறித்து பேசமுடியும்.

2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் கொண்டதல்ல. அதற்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும். அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைந்த பார்வை தேவை. இதுபற்றிய விரிவான உரையாடல் இன்னும் நடைபெறவில்லை. இப்போது தான் ஒரு தொடக்க புள்ளியாக இருக்கிறது.

ஆகவே 2026-ல் அப்படியொரு காலம் கனியும் என்று சொல்ல முடியாது. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 2016-ல் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரு பங்குண்டு. அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியை உருவாக்கியதிலும் விசிகவுக்கு பங்கு உண்டு.

அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதிலும், அதை மேலும் வலுப்படுத்துவதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் கடமை, நோக்கம் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். அது உண்மையல்ல என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top