Close
நவம்பர் 23, 2024 11:14 காலை

எல்லாமே கண்துடைப்பு..! என்ன நடக்கிறது அதிமுகவில்…?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-கோப்பு படம்

10 பேர்கொண்ட ‘கள ஆய்வுக்குழு’ ஒன்றை அமைத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கட்சிக்குள் நடவடிக்கைகள் இருக்குமென்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரம். அதேநேரத்தில், ‘இது களையெடுக்கும் குழு அல்ல… வெறும் கண்துடைப்பு குழு’ என்று வெடி வீசுகிறார்கள் சீனியர்கள்.

அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசியபோது, “கட்சியின் உள்விவகாரங்களை அறிந்து கொள்ளவும், அதைச் சரிசெய்யவும் முன்பு நால்வர் அணியை அமைத்தார் அம்மா. அதில் எடப்பாடியும் ஒருவர். அந்த நால்வர் அணி செய்த வேலையை இப்போது 10 பேர்கொண்ட குழு மூலமாகச் செய்ய நினைக்கிறார் எடப்பாடி.

அதற்காகவே துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, வரகூர் அருணாசலம், மகளிரணிச் செயலாளர் பா.வளர்மதி ஆகியோரைக்கொண்டு கள ஆய்வுக்குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.

இந்த பத்துப் பேரும் தலா இரண்டு பேர்கொண்ட 5 துணைக் குழுக்களாகப் பிரிந்து மாவட்டக் கழகங்களில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்கள். அதன்படி, முனுசாமியும் வளர்மதியும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

திண்டுக்கல் சீனிவாசனும் தங்கமணியும் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை ஆய்வுசெய்வார்கள்.

நத்தம் விசுவநாதன், செம்மலை இருவரும் மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களையும், வேலுமணி, வரகூர் அருணாசலம் இருவரும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் கள ஆய்வு செய்வார்கள்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம் குழு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆய்வுசெய்யவிருக்கிறது. சென்னை மாவட்டத்துக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்தக் கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே, கட்சி மறுசீரமைப்புக்காகத்தான்.அதாவது, 2021 டிசம்பரில் அ.தி.மு.க அமைப்புக்கான உட்கட்சித் தேர்தல் நடந்தது. இதில், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு நிர்வாகிகளாக 30% பேர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் பதவியில் நீடிப்பதால், அவர்களை நீக்கிவிட்டு, புதிய நியமனங்கள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு வரும்பட்சத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படக்கூடும். அப்படியொரு தேர்தல் நடந்தால், உள்ளூர் அரசியலில் தங்களுக்கு எதிரானவர்களும் களமிறங்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வால்தான் சில மா.செ-க்கள், உறுப்பினர் அட்டையையே முறையாக வழங்குவதில்லை.

2.15 கோடி தொண்டர்களைக்கொண்ட இயக்கம் அ.தி.மு.க. தொண்டர்களைக் கட்சியுடன் உணர்வுபூர்வமாக இணைக்கும் உறுப்பினர் அட்டையை விநியோகிக்காமல் இருப்பதுடன், மாவட்டக் கழகத்தையும், 18 சார்பு அணிகளையும் கன்ட்ரோல் செய்து, மாவட்டச் செயலாளர்களே கட்சியை பலவீனப்படுத்து கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

இந்தப் பிரச்னைகளையெல்லாம் ஆய்வுசெய்து, களையெடுப்புகளை மேற்கொள்ளவே பத்து பேர்கொண்ட கள ஆய்வுக்குழுவை அமைத்திருக்கிறார் எடப்பாடி. டிசம்பர் 7-ம் தேதிக்குள் அறிக்கையைக் கொடுக்கவும் குழுவுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். இந்தக் குழு சரியாகப் பணிகளை முடித்தாலே கட்சி புத்துணர்ச்சி பெற்றுவிடும்” என்றனர்.

தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர் “இப்படித்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்க, 82 பொறுப்பாளர்களை நியமித்தார் எடப்பாடி. அதன் மூலமாக, 50 சதவிகித பூத் கமிட்டிகூட முறையாக அமைக்கப்படவில்லை எனத் தெரியவந்தது.

அதேபோல உறுப்பினர் அட்டையை முறையாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக 82 பொறுப்பாளர்களைக் கடந்த மாதம் நியமித்தார் எடப்பாடி. ஆனால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்குக்கூடப் பெரும்பாலானோர் நேரில் செல்லவில்லை. எடப்பாடியால் அந்தப் பொறுப்பாளர்களைக் கண்டிக்கக்கூட முடியவில்லை.

தற்போது அமைக்கப்பட்டிருக்கும் கள ஆய்வுக்குழுவிடம், ‘தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் நேரில் அழைத்துப் பேசி, கட்சியின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என எடப்பாடி உத்தரவிட்டிருக்கிறார்.

இதே நிர்வாகிகளிடம்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 நாள்களுக்கு மேலாக சென்னையில் வைத்து ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அப்போது, கட்சியின் நிலை குறித்துப் பேச யாரையுமே அவர் அனுமதிக்கவில்லை.

தேர்தல் தோல்வியால் அதிருப்தியிலிருந்தவர்களிடம் புள்ளிவிவர சால்ஜாப்புகளைச் சொல்லி அமைதியாக்கி விட்டார். அதிலும் ஒத்திவைக்கப்பட்ட கரூர், புதுச்சேரி தொகுதிகளுக்கான ஆய்வுக் கூட்டம் என்னவானது என்றே தெரியவில்லை.

நிலைமை இப்படி இருக்கும்போது அனைத்துத் தரப்பு நிர்வாகிகளையும் ஓரிடத்தில் திரட்டி, கள ஆய்வுக்குழு அவர்களிடம் பேசி பிரச்னைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்வது அப்பட்டமான கண்துடைப்புதான்.

இதனால், நிர்வாகிகளுக்குத் தேவையற்ற செலவுதான் ஏற்படும். கட்சி ஆக்டிவ்வாக இருப்பதுபோல காட்டிக்கொள்ளவே இது போன்று நாடகம் நடத்துகிறார் எடப்பாடி. மக்களுக்கான போராட்டம், கள அரசியல், கூட்டணி ஏற்பாடு போன்றவற்றில் ஆர்வம் காட்டாமல் குழு, குழுமேல் குழு அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top