Close
நவம்பர் 24, 2024 12:13 காலை

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு..!

நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற, ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து தூய்மைப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரமூர்த்தி பேசினார்.

நாமக்கல், நவ. 22-
மேயர், கமிஷனர் ஆகியோரின் வீடுகளுக்கு, பயன்படுத்துவதாக கூறி, நாமக்கல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நகரில், திருச்செங்கோடு மெயின் ரோட்டில், மாநகராட்சி ஆபீஸ் உள்ளது. இந்த ஆபீஸ் முன்பு, மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சங்க அரசு அறிவிப்பின்படி குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கூட்டம் நடத்தினார்கள்.

அப்போது மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் கூட்டமாக திடீரென்று மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தூய்மைப் பணியாளர்களை சமாதானப்படுத்தி மாநகராட்சி அலுவலக நுழைவாயிலை பூட்டினர்.

இதனையடுத்து ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் நுழைவு வாயில் முன்பு திரண்டு நின்று, கோரிக்கை விளக்க கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து தூய்மைப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, பொதுச்செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பின்னர் தமிழ்நாடு அனைத்து தூய்மைப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாமக்கல் மாநகராட்சி மேயர், துணை மேயர், கமிஷனர், சுகாதார அலுவலர் ஆகியோரின் வீடுகளுக்கும்,

மேலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கும், மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களை வேலைக்காக பயன்படுத்தப்படுகின்றனர். தூய்மைப்பணியாளர்கள் குப்பையில் கிடக்கும் இரும்பு பொருட்களை கழுவி, பழைய இரும்பு கடையில் விற்று, விற்பனை செய்த பணத்தை கொடுக்கா விட்டால் தொடர்ந்து வேலை வழங்கமாட்டோம் என மிரட்டுகின்றனர்.

மாநகராட்சி மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தூய்மைப்பணியாளர்களை பணிக்கு அமர்த்தி, திருமணம் நடத்துபவர்களிடம் கமிஷனரும், சுகாதார அலுவலரும் பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

தூய்மைப்பணியாளர்கள் விடுமுறை எடுத்தால், அலுவலர்களுக்கு ரூ.100, 200 கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த நாள் வேலை கிடையாது என கூறுகின்றனர். மேலும் பெண் தூய்மைப்பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்.

அனைவரும் தாழ்த்தப்பட்டோர் என்பதால் அவர்களை துன்புறுத்துகின்றனர். அரசு மூலம் நிரந்தர பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு தூய்மைப்பணி கொடுக்காமல் வேறு பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top