ஆவடி ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் எஸ்கலேட்டர் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை பயணிகள் கடந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்.
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான ஆவடி ரயில் நிலையத்தில் இருபுறமும் எல்.சி., கேட் உள்ளது. இது பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே கேட்டை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு அத்தியாவசியம் மற்றும் பணிகளுக்காகவும், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் என பலரும் கடந்து செல்கின்றனர். இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.இதனால் தொடர்ந்து ரயில் விபத்துகள் ஏற்படுகின்றது.
இந்த நிலையில், பொதுமக்கள் தொடர் புகாரையடுத்து, இருபுறமும் மதில் சுவர் எழுப்ப ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, ஆவடி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள எல்.சி. 8 பாதையில், கடந்த ஆண்டு மதில் சுவர் எழுப்பப்பட்டது.இதன் வாயிலாக இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது.
அதன்பிறகு தண்டவாளத்தை கடந்து செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்பு போலீசார் அபராதம் விதித்தும், பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சில நேரங்களில் நடுவழியில் நிறுத்தப்படும் சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து,ஆபத்தான வகையில் செல்வதும் தொடர்ந்து நடக்கிறது.
ரயில்வே நிர்வாகம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கடந்த 2019 ல் மின்தூக்கி அமைக்கும் பணியை துவங்கியது. தற்போது இந்த பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது.
புது மேம்பாலம் திறந்தும், பெரும்பாலான மக்கள் அவற்றை பயன்படுத்தாமல் தொடர்ந்து தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் புது மேம்பாலம் அருகே உள்ள பாதையை முற்றிலுமாக அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.