‘நயினார் நாகேந்திரன் எனது குடும்ப நண்பர். எனது வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை வரவேற்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றேன். அவரை சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தேன்.’ என்று நயினார் நாகேந்திரனை சந்தித்தது குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகத்தின் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், பார்லிமென்ட் எம்.பி.,க்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு கொடுப்பதற்கு திட்டமிட்டிருந்தேன்.
அவ்வாறு முன்னாள் எம்பிக்கள், கழகத்தின் நிர்வாகிகள் என அனைவருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கிவிட்டு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனையும் நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்னுடன் இருந்தார்கள். எனது குடும்பத்தில் நடக்கவுள்ள சுபநிகழ்ச்சிக்காக எனது குடும்ப நண்பரை சந்தித்தேன். அதை பலர் அரசியல் சாயம் பூசி செய்தியாக்கி இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி இருக்கிறார்.