Close
நவம்பர் 27, 2024 5:29 காலை

கிராம சபை கூட்டத்தில் கவுரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்

வல்லம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவுரவித்தனர்.

தமிழகம் முழுவதும் நவம்பர் 23 ஆம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற இருந்த இந்த கிராம சபை கூட்டம் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 274 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விமலாதேவி தலைமையில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு, கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கௌரவித்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அவ்வகையில் தொற்றுநோயில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது  உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வல்லம் ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு தூய்மையாக வைத்த தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்றத் தலைவர் விமலாதேவி சால்வை அணிவித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வு ஊராட்சியில் வசிக்கும் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top