Close
நவம்பர் 24, 2024 11:29 காலை

தேனியில் டயா வாக்கத்தான் விழிப்புணர்வு வேக நடைபோட்டி..!

தேனி நலம் மருத்துவமனை முன்பு நடந்த போட்டியை தேனி எஸ்.பி., சிவபிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் நடந்த டயா வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.

தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் ஆண்டு தோறும் உலக சர்க்கரை நோய் தினத்தை ஒட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேனி டயா வாக்கத்தான் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்ற நடை மின்னல் தேனி முருகேசனுக்கு எஸ்.பி., சிவபிரசாத் பரிசு வழங்கினார்.

இந்த ஆண்டு தென்னிந்தியாவில் முதல் முறையாக ‘‘டயா வாக்கத்தான்’’ என்ற வேக நடைபோட்டி நடந்தது. போட்டியில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பலநுாறு பேர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

தேனி நலம் மருத்துவமனை முன்பு நடந்த போட்டியை தேனி எஸ்.பி., சிவபிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவரும், தனது மனைவி டாக்டர் அர்பிதா உடன் நடைப்பயிற்சியில் கலந்து கொண்டு போட்டிக்கான முழு துாரத்தையும் நடந்து கடந்தார்.

அவருடன் டாக்டர்கள் ராஜ்குமார் (நலம் மருத்துவமனை தலைமை டாக்டர்), வனிதா ராஜ்குமார், பாலசங்கா குழும தொழிலதிபர் கதிரேசன், டாக்டர் பிரபாகரன், டாக்டர் முகமதுபாஷித், நலம், பாலசங்கா குழுமங்களின் பணியாளர்கள் அத்தனை பேரும் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சக்திவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜூக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நலம் மருத்துவமனையில் தொடங்கி அல்லிநகரம் வழியாக கோகிலா மருத்துவமனையை அடைந்து அங்கிருந்து பெரியகுளம் ரோடு வழியாக நேரு சிலைக்கு வந்த வேக நடைப்போட்டி குழுவினர், பின்னர் நலம் மருத்துவமனைக்கு வந்தனர். போட்டி துாரம் மொத்தம் 4.750 கி.மீ.,. இவ்வளவு துாரத்தையும் பங்கேற்ற அத்தனை பேரும் நடந்து கடந்தனர். போட்டி நடந்த பாதையில் ஐந்து இடங்களில் முதலுதவிக்குழுவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

நடந்து சென்றவர்களுக்கு குடிநீர், ஓ.ஆர்.எஸ்., கலந்த குடிநீர் வழங்கப்பட்டது. முதலுதவிக்கான ஏற்பாடுகள் ஐந்து இடங்களில் செய்யப்பட்டு அங்கு மருத்துவக் குழுவினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். இருப்பினும் யாருக்கும் எந்த உதவியும் தேவையில்லாத அளவு பாதுகாப்பான சூழலை போலீசார் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

போட்டி துாரத்தை கடந்தவர்களுக்கு பல்வேறு வகையான பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. சர்க்கரை நோய் உள்ளோருக்கான நடைப்போட்டியில் போட்டி துாரத்தை கடந்து செந்தில்குமார் முதலிடம் பெற்றார். லோகன்துரை இரண்டாம் இடம் பிடித்தார். பிரகதீஸ்வரன் மூன்றாம் இடம் பிடித்தார்.

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கான பிரிவில் தேனி முருகேசன் முதலிடம் பிடித்தார். (ஒட்டுமொத்த பிரிவிலும் முருகேசன் முதலிடம் பிடித்தார்). ராஜேஷ்குமார் இரண்டாம் இடம் பிடித்தார். ஜெயக்குமார் மூன்றாம் இடம் பிடித்தார். சர்க்கரை நோய் உள்ளோருக்கான பெண்கள் பிரிவில் கலைச்செல்வி முதலிடம் பிடித்தார்.

சின்னம்மாள் இரண்டாம் இடம் பிடித்தார். பொதுப்பிரிவில் சுரேஷ்குமார், காளிராஜன், கணேசன், குமார், சடையாண்டி, பாண்டியராஜன், சிவபாலன், பாலாஜி, முத்துக்குமார், இப்ராகிம்  முதல் 10 இடங்களை பிடித்தனர். அனைவருக்கும் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பங்கேற்ற அத்தனை பேருக்கும் துளசி செடிகள் பரிசாக வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top