Close
நவம்பர் 24, 2024 10:34 காலை

தேனியை மிரட்டிய நடை மின்னல்…!

தேனி வி.ஜே.பி.க்களின் பாராட்டு மழையில் நனைந்த தேனி முருகேசன்.

60 வயது நிரம்பிய தேனி முருகேசனின் வேகமான நடையை பார்த்த தேனி பொதுமக்கள் வியந்து போய் விட்டனர்.

தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் டயா வாக்கத்தான் என்ற வேக நடைப்போட்டி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.  போட்டி மொத்தம் 4.750 கிலோ மீட்டர் துாரம் நடைபெற்றது. இதில் தேனி முருகேசன் என்ற 60 வயதை கடந்த முதியவர் கலந்து கொண்டார்.

இவரது தோற்றத்தை பார்த்தால் சுமார் 35 வயது முதல் 40 வயதிற்குள் தான் இருப்பார் என கணிக்க முடியும். அந்த அளவு வலுவான, இளமையான உடல் தோற்றத்துடன் இருந்தார். போட்டி காலை 7.15 மணிக்கு நலம் மருத்துவமனை முன்பு தொடங்கியது. ஆனால் காலை 6 மணிக்கே போட்டி தொடங்கும் இடத்திற்கு வந்த முருகேசன், துறு, துறுவென அங்கும் இங்கும் நடந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போதே அங்கிருந்தவர்கள் பலரும் முருகேசனை கவனித்து இவர், யார் என விசாரிக்க தொடங்கினர். யாரிடமும் பேசாமல் பயிற்சியில் கவனமாக இருந்த முருகேசன், போட்டி தொடங்கியதும் மின்னல் போல் நடந்தார். ‘‘மின்னல் போல் நடந்தார்’’ என்பது தான் சரியான வார்த்தை பதிவாக இருக்கும்.

தொடக்கம் முதல் போட்டி துாரத்தை நிறைவு செய்யும் வரை ஒரே மாதிரி வேகம். தேனிக்குள் இவர் நடந்து சென்ற வேகத்தை பார்த்து பொதுமக்கள் வியந்து போய் விட்டனர். அப்படி ஒரு சுறுசுறுப்பு, துரு, துருப்பு.. வேகம், அழகிய நடை என அசத்தினார்.

போட்டி நடந்த துாரம் 4.750 கி.மீ.,ஐ, இவர் 30 நிமிடம் 36 வினாடிகளில் நடந்தார். அதாவது இவருக்கு பின்னால் வந்தவர்கள் மூன்றாவது கி.மீ.,ஐ நெருங்கிக் கொண்டிருந்த போது, இவர் முழு துாரத்தையும் கடந்து முடித்திருந்தார். அந்த அளவு வேகம். அதுவும் 60 வயதில். வெற்றிக் கோட்டை எட்டியதும் இவரை சூழ்ந்து கொண்டு பாராட்டி குவித்து விட்டனர்.

குறிப்பாக பாலசங்கா குழும தொழிலதிபர் கதிரேசன் அண்ணாச்சி, தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராமன்  அண்ணாச்சி, அகில இந்திய பார்வர்டுபிளாக் தேனி மாவட்ட செயலாளர் எம்.பி.எஸ்.,முருகன், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம், யோகா பயிற்சியாளர் முரளீதரன், தன்னார்வலர்கள் பசுமைத்தேனி சர்ச்சில்துரை, சித்தர் சிவா உட்பட பலர் முருகேசனை பாராட்டினர்.

இவர்களிடம் பேசிய முருகேசன், ‘தேனி பாலசங்கா குழும தொழிலதிபர் முருகேசன் அண்ணாச்சி மட்டும் உயிருடன் இருந்திருந்தால், நான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு கொடுத்திருப்பேன்.

அவரது எதிர்பாராத திடீர் மறைவால் எனது வாழ்க்கை தடம் புரண்டு விட்டது. இதுவரை நான் நடைப்போட்டி, ஒட்டப்போட்டி, மாரத்தான் என 167 போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். பெரும்பாலும் எல்லாவற்றிலும் வெற்றி தான். கடந்த வாரம் கூட காங்கேயம்- முத்துார்- பட்டினப்பாக்கத்தில் நடந்த மாராத்தானில் 42 கி.மீ., துாரத்தை 3 மணி நேரம் 59 நிமிடங்களில் கடந்து முதலிடம் பெற்றேன்.

என் வாழ்க்கையில் சரியான நேரத்தில் வந்த தொழிலதிபர் முருகேசன் இறந்து விட்டதால், அவருக்கு பின்னர் எனக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் ஆள் கிடைக்காமல் முடங்கிப்போனேன் என்றார்.

இதனை கேட்ட பாலசங்கா குழும தொழிலதிபர் கதிரேசன் அண்ணாச்சி, ‘கவலைப்படாதீர்கள். இன்னும் வாய்ப்புகள் உள்ளது. நாம் இணைந்தே செயல்படுவோம். முருகேசன் அண்ணாச்சி மறைவால் உங்கள் வாழ்வில் விழுந்த இடைவெளியினை அவரது தம்பிகளான நாங்கள் நிரப்புகிறோம்’ என அவருக்கு ஆறுதல் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top