கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம், சேலம் நெய்காரப்பட்டி பொன்னா கவுண்டர் திருமண மண்டபத்தில் தலைவர் முத்துராஜன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சின்னமுத்து வரவு செலவு கணக்கினை தாக்கல் செய்தார். துணைச் செயலாளர் ஜெயவேல் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை, கோவை, ஜெம் மருத்துவமனை டாக்டர் சி.பழனிவேலு கலந்து கொண்டு பேசினார். இதில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கக் கோரியும், காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டியும், மேட்டூர் அணையின் உபரி நீரை மின் மோட்டார் மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கொண்டு நீர் வளங்களை உயர்த்தி விவசாய விளை நிலங்களை பாதுகாக்க வேண்டும்.
வரவுள்ள பட்ஜெட் கூட்டத்தில் தமிழக அரசு இதற்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும், 100 நாள் வேலை திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பு தொகையுடன், விவசாய பணிகளில் ஈடுபடுத்த மத்திய அரசு அரசாணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் துணை செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.