Close
நவம்பர் 25, 2024 7:30 காலை

அமெரிக்காவை ஆட்சி செய்கிறாரா எலான் மஸ்க்..?

டொனால்ட் டிரம்ப் உடன் எலோன் மஸ்க்

இந்தியாவில் அதானி என்றால், அமெரிக்காவில் எலான் மஸ்க்..?

இந்தியாவில் அதானி ஆட்சி மாற்றங்களைச் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், எலான் மஸ்க் ஆட்சியே செய்யும் இடத்துக்கு வந்து விட்டார். உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிக்காக கடும் பிரசாரம் செய்தார்.

ட்ரம்பின் தேர்தல் செலவுகளுக்காக அதிக நன்கொடை அளித்தவரும் அவர் தான். தனிப்பட்ட முறையில் பிரசாரக் கூட்டங்களை நடத்தியதுடன், தனது எக்ஸ் சமூக வலைதளத்தையும் ட்ரம்பின் வெற்றிக்காகப் பயன்படுத்தினார்.

ட்ரம்ப் வென்றதும், அமெரிக்க அரசில் நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்வதற்காக Department of Government Efficiency என்ற துறையை உருவாக்கியுள்ளார். அதன் தலைமைப் பொறுப்பை அமெரிக்க இந்தியரான விவேக் ராமசாமியுடன் இணைந்து எலான் மஸ்க் ஏற்கிறார்.

அது மட்டுமல்ல, அதிபர் தேர்தலில் வென்றதும் ட்ரம்ப் செய்ய இருக்கும் மாற்றங்கள் தொடர்பான பெரும்பாலான கூட்டங்களில் எலான் மஸ்க் பங்கேற்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் நாட்டுக்கு அமெரிக்க உதவிகள் ட்ரம்ப் ஆட்சியிலும் தொடருமா என்பதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்.

அவர் கடந்த வாரம் ட்ரம்புக்கு போன் செய்து பேசினார். சில நிமிட உரையாடலுக்குப் பிறகு ‘‘எலான் மஸ்க்கிடம் பேசுங்கள்” என்று போனைக் கொடுத்து விட்டார் ட்ரம்ப். அதன்பின் ஜெலன்ஸ்கியும் எலான் மஸ்க்கும்தான் உக்ரைன் நிலவரம் பற்றிப் பேசினர்.

ஈரானுடன் அமெரிக்காவின் உறவு மோசமான நிலையில் இருக்கிறது. ஐ.நா சபைக்கான ஈரான் தூதர் அமிர் சையத் இரவானி ரகசியமான ஓர் இடத்தில் எலான் மஸ்க்கை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியிருக்கிறார். இப்படி ட்ரம்ப் அரசின் வெளியுறவுக்கொள்கையைத் தீர்மானிக்கும் முக்கியமான சந்திப்புகளை எலான் மஸ்க் நடத்தி வருகிறார்.

ட்ரம்பின் பேச்சுகளுக்கும் எலான் மஸ்க்கின் விருப்பங்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. சீனாவை மோசமாக வெறுப்பவர் ட்ரம்ப். சீனத் தயாரிப்புகள் அமெரிக்காவில் வந்து விற்பனையாவதையும் எதிர்ப்பவர். ஆனால், எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் தயாராவதும் விற்கப்படுவதும் சீனாவில் தான்.

இரு நாடுகளின் உறவு ட்ரம்பின் செயல்பாடுகளால் மோசமடைந்தால், அதிகம் பாதிக்கப்படும் நபராக எலான் மஸ்க் இருப்பார். அதேபோல எலெக்ட்ரிக் கார்களையும் ட்ரம்ப் கிண்டல் செய்வது வழக்கம். எலான் மஸ்க்கின் முதன்மை பிசினஸே எலெக்ட்ரிக் கார் உற்பத்திதான். இப்படி முரண்பாடுகள் நிறைய உண்டு.

இன்னொரு பக்கம், மஸ்க்கின் பெருமளவு வருவாய், அமெரிக்க அரசு ஒப்பந்தங்கள் மூலமாகவே வருகிறது. அவரது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க் மூலம் இணையவசதி அளிக்கும் சேவையை அமெரிக்க அரசு பயன்படுத்தி வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவும் அமெரிக்க ராணுவமும், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.

இதற்காக 1.8 பில்லியன் டாலர் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. ட்ரம்பின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எலான் மஸ்க் இன்னும் எவ்வளவு தூரம் வளர்வார் என்பதே அமெரிக்காவில் இப்போது நடந்து வரும் விவாதம்.

மறைமுகமாக ஆட்சிகளைத் தீர்மானித்த தொழிலதிபர்கள் இன்று நேரடியாகவே முடிவெடுக்கும் இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என்பதுதான் ஜனநாயகத்துக்கான சோதனை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top