தேனி சுப்பன்செட்டி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி சுப்பன்செட்டி தெரு நகரின் முக்கிய வர்த்தக மையமாக மாறி உள்ளது. நுாற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள், பல ஆயிரம் குடியிருப்புகள் இங்கு உள்ளன. இந்த பகுதியை கடந்தும் குடியிருப்புகள் உள்ளது. அவர்களும், சுப்பன்செட்டி தெருவை கடந்தே செல்கின்றனர். குறிப்பாக தேனி நகரின் முக்கிய வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதியாக இப்பகுதி மாறி உள்ளது.
இங்குள்ள டாஸ்மாக் கடை தான் இப்பகுதியின் மிகப்பெரிய பிரச்னையாக மாறி உள்ளது. மிகவும் பிஸியான இந்த பகுதியில் குடிமகன்களால் பெரும் தொல்லைகள் ஏற்படுகிறது. இரவானால் இப்பகுதி கடைகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் பொதுமக்கள் செல்வதை தவிர்க்கும் அளவுக்கு குடிமகன்களின் தொல்லை அதிகமாக உள்ளது. தவிர குடிமகன்களால் இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிபவர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை உருவாகி விட்டது.
எனவே இந்த டாஸ்மாக் கடையினை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி இந்து வியாபாரிகள் சங்கம், திட்டச்சாலை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை நடந்த மனுநீதிநாள் முகாமில் மனு கொடுத்தனர்.
தங்கள் கோரிக்கையினை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எப்படியாவது இந்த டாஸ்மாக் கடையை மாற்றித்தர கலெக்டர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
வழக்கமாக பெண்கள், குடியிருப்பு பகுதி மக்கள் தான் டாஸ்மாக் கடைகளை மாற்ற வலியுறுத்தி மனு கொடுப்பார்கள், போராட்டம் நடத்துவார்கள். தேனியில் இந்த முறை வியாபாரிகளே கடையை மாற்ற வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர் என்றால் குடிமகன்களின் தொல்லை எந்த அளவு இருக்கும் பாருங்கள் என பொதுமக்களும் கடையை மாற்ற ஆதரவு கொடுத்துள்ளனர்.