பள்ளியில் மாணவிகளிடம் ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தமிழக தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் (POCSO), SSAC அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்விசார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு (Compulsory Retirement) பணி நீக்கம் (Removal), பணியறவு (Dismissal) மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Student Safeguarding Advisory Committee) அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.