டிஜிட்டல் வரவு- செலவுகளில் மக்களை ஏமாற்றுவதற்காகவே பயிற்சி மையங்கள் உள்ளன. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நூறு சதவீதம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என எஸ்.பி.ஐ., மதுரை மண்டல மேலாளர் மதன் எச்சரித்துள்ளார்.
மதுரை மண்டல எஸ்.பி.ஐ., சார்பில் தேனியில் டிஜிட்டல் வரவு செலவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘டவுன்ஹால்’ மீட் நடந்தது. மதுரை மண்டல மேலாளர் மதன் தலைமை வகித்தார். பழனிசெட்டிபட்டி கிளை மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார் வகித்தார்.
முதன்மை மேலாளர் ஜெய்சங்கர், மேலாளர் அஸ்வஜித், துணை கிளை மேலாளர் பாண்டி, வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மண்டல மேலாளர் மதன் பேசியதாவது: இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்.பி.ஐ., வங்கி 50 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இவ்வளவு பெரிய சேவையில் டிஜிட்டல் வரவு செலவுகள் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறி விட்டது.
எந்த அளவு டிஜிட்டல் பயன்பாடு நமது வரவு செலவுகளையும், வாழ்க்கை முறைகளையும் எளிமையாக்கி உள்ளதோ அதற்கு ஏற்ப இதில் ஆபத்துக்களும் உருவாகி உள்ளன.
டிஜிட்டல் பயன்பாட்டில் ஆபத்துக்களும், இடர்பாடுகளும் இருக்கிறது என்பதற்காக இதனை தவிர்க்க முடியாது. ஆனால் விழிப்புணர்வு மூலம் நிச்சயம் நாம் இந்த இடர்பாடுகளையும், ஆபத்துக்களையும் எளிதாக கடந்து விட முடியும்.
தினமும் ஒரு மாவட்டத்தில் குறைந்தது 5 டிஜிட்டல் குற்றங்கள் நடக்கின்றன. அப்படியானால் நாடு முழுவதும் எந்த அளவு இருக்கும் என்பதை கவனியுங்கள். டிஜிட்டல் குற்றவாளிகள் மிக, மிக நுட்பமான முறைகளை கையாள்கின்றனர்.
வாடிக்கையாளர்களை கவர்வது எப்படி, அவர்களிடம் மொபைலில் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி தன்வசப்படுத்தி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று பணத்தை அபகரிப்பது எப்படி என குற்றங்களை செய்ய பயிற்சிகள் வழங்குகின்றனர். இதற்காக பயிற்சி மையங்களே உள்ளன. அந்த அளவு டிஜிட்டல் குற்றங்கள் அபாயகரமாக மாறி வருகிறது.
டிஜிட்டல் குற்றவாளிகளுக்கு பணம் மிக எளிதாக அவர்கள் உழைக்காமலேயே கிடைத்து விடுகிறது. ஒரு இடத்தில் டிஜிட்டல் முறையில் திருடப்படும் பணம், ஓரிரு நிமிடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களுக்கு மாற்றப்பட்டு விடுகிறது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் அக்கவுண்ட்களை கடந்து செல்லும் போது, அந்த பணத்தை மீட்பது மிகவும் சவாலான பணியாக மாறி விடுகிறது. டிஜிட்டல் அரெஸ்ட்களில் சிக்கிய பலர் பணத்தை தங்கள் வங்கி கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்ற வங்கிக்கு வரும் போது, அவர்களை கவனிக்கும் வங்கி அதிகாரிகள் பலர் அந்த சிக்கலை கவனித்து காப்பாற்றி உள்ளனர்.
சிலர் வங்கி அதிகாரிகளிடம் தகவல் சொல்ல தயங்கினாலும், அவர்களின் நடவடிக்கைகளை வைத்தே வங்கி அதிகாரிகள் துல்லியமாக கவனித்து காப்பாற்றும் சம்பவங்களும் அதிகம் நடந்து வருகிறது. எனவே வங்கி அதிகாரிகளையும், பணியாளர்களையும் நம்பி நீங்கள் சிக்கியிருக்கும் சிக்கல் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
டிஜிட்டல் குற்றங்களி்ல் ஏமாறாமல் தவிர்க்க விழிப்புணர்வு மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதனால் எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வங்கிகள் வழங்கிய விழிப்புணர்வு வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றினால் நுாறு சதவீதம் இந்த முறைகேடுகளில் இருந்து எளிதாக தப்பி விடலாம். எனவே விழிப்புடனும், கவனமுடனும் இருங்கள்.
எந்த சந்தேகம் இருந்தாலும் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். வங்கிகள் வழங்கிய நம்பர்களில் உடனுக்குடன் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்து பலன் பெறுங்கள். இவ்வாறு பேசினார்.
மேலாளர் அஸ்வஜித் பேசியதாவது: எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களில் 87 சதவீதம் பேர் டிஜிட்டல் வரவு செலவுகளில் ஈடுபடுகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 72 சதவீதம் பேர் டிஜிட்டல் வரவு செலவுகளில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் மோடியே டிஜிட்டல் குற்றவாளிகளை பற்றி மான் கி பாத் நிகழ்ச்சியில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். ஒரு நாட்டின் பிரதமரே எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் என்றால் குற்றவாளிகளின் தொழில் நுட்பங்கள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் வங்கிகள் காட்டும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றினால் போதும். இந்த சிக்கல்களில் இருந்து எளிதில் தப்பி விடலாம். இவ்வாறு பேசினார்.