கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட்டை தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து விட்டுவிட்டு கன மற்றும் மிதமான மழையும் பெய்து வரும் நிலையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
இந்நிலையில் மழை வெள்ளம் மற்றும் காற்று அதிகமாக வீசி பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க 25 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் கடலூரில் முகாமிட்டுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்டாலோ அல்லது காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அதிக மழை வெள்ளத்தினால் தண்ணீர் தேங்கி இருந்தால் அப்பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களை மீட்க ரப்பர் படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வேகமாக வீசும் காற்றினால் மரங்கள் விழுந்து இருந்தால் அதை அகற்றுவதற்காக நவீன மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பொருட்களுடன் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். எந்த நிலையிலும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.