தென்காசியில் உதயநிதி பிறந்தநாளை கொண்டாட மாணவர்களிடமிருந்து ரூபாய் 500 வசூல் செய்ததுடன், வெயிலில் மாணவர்களை துன்புறுத்தியதாகவும் பள்ளி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாக பாஜகவின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்து வரப்பட்டு கொளுத்தும் வெயிலில் யோகா செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கோஷங்கள் சொல்லுமாறு மாணவர்களை வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் தென்காசி திமுக சார்பில் யோகாசனம் செய்யப்படுவதாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ரூபாய் 500 வசூல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே அரசியல் பிரமுகர்களின் பிறந்த நாளுக்காக மாணவர்களிடம் ரூபாய் வசூல் செய்யப்பட்டும், வெயிலில் வாட்டி வதைக்கப்பட்டும், குடிநீருக்காக திண்டாடும் நிலைக்கு செல்லப்பட்ட திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.