Close
டிசம்பர் 5, 2024 2:10 காலை

முதன் முதலில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைத்த எம்.ஜி.ஆர்..!

ஆம்புலன்ஸ் சேவை-கோப்பு படம்

இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1979 நவம்பர் 5ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.

டாக்டர் நடராசன் தலைமையிலான மருத்துவக்குழு ‘விபத்து மற்றும் அவசர மருத்துவ தேவை திட்டம்’ தொடர்பான வரைவுத்திட்டத்தை தமிழக அரசிடம் கொடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் முராரி இத்திட்டம் தொடர்பான அரசாணையை வெளியிட்டார்.

ஆனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருந்தது. இத்திட்டத்திற்கு ஒதுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. இதற்கு முன்பு ஆட்சி செய்து விட்டுப் போன போகும் போது அரசாங்க கஜானா காலியாக இருந்தது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிதி நிலைமையை சரி செய்து வரவே பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

இந்நிலையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சந்தித்து நிலைமையை விளக்கினார் முராரி. இத்திட்டத்தின் அவசரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் முதலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 50 லட்ச ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார். முதல்கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்சுக்கு ரூ.60,000 என்ற வகையில் 50 ஆம்புலன்ஸ்சுகளும், உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் வாங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

1980ம் ஆண்டு இறுதிக்குள் 140 ஆம்புலன்ஸ்சுகள் , 39 அவசர சிகிச்சை மையங்கள், போலிஸ் ஒயர்லெஸ் கருவிகள் என இத்திட்டம் பெரிய அளவில் விரிவடைந்தது. இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணிக்க காவல்துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்ப்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் லலிதா காமேஸ்வரன் போன்றோர்களை உறுப்பினர்களாகவும், சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நடேசனை தலைவராகவும் கொண்டு கண்காணிப்பு குழுவையும் அமைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பிட்டசில மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்திய அளவில் செயல்படுத்திய 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது இந்த திட்டம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top