Close
டிசம்பர் 5, 2024 2:37 காலை

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகுமா..? அமைச்சர் பதில்..!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கும். அதேபோல இந்தாண்டும் வரும் டிசம்பர் 16ம் தேதி திங்கட் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

16ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக டிசம்பர் 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில், வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயலால் பெரிதும் பாதிப்புகளை சந்தித்துள்ள விழுப்புரம், கடலுர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் புயல் பாதிப்பில் இருப்பதால் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே அவர்களின் நலனை கருத்தில்கொண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அரையாண்டு தேர்வு தொடர்பான கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது “வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், அந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்துவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

தேர்வு குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ம் தேதி தொடங்க இருந்த செய்முறைத் தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top