Close
டிசம்பர் 12, 2024 11:41 காலை

உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் இந்தியா வளர்ச்சி..! சீனா வீழ்ச்சி..!

யூபிஎஸ் வங்கி -கோப்பு படம்

கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக சுவிஸ் நாட்டு வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கியான யூபிஎஸ் பில்லியனர்கள் வளர்ச்சி குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது 1,757 என்ற எண்ணிக்கையில் இருந்த பில்லியனர் 2,682 ஆக அதிகரித்துள்ளது அந்த அறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது. 2024ம் ஆண்டில் மட்டும் 268 பேர் பில்லியனர்களாக உருவெடுத்துள்ளனர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) அவர்கள் அனைவரும் சுயதொழில் செய்து அதன் மூலம் வளர்ச்சி பெற்றவர்கள்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது, 6.3 டிரில்லியன் டாலரில் இருந்து 14 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.(ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி)

தொழில்நுட்பம் சார்ந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரித்து, 788.9 பில்லியன் டாலரில் இருந்து 2.4 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. வட அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு 58.5 சதவீதம் உயர்ந்து 6.1 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர்களுக்கு சிறந்த வளர்ச்சி இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 27.6 சதவீதத்தில் இருந்து 40 சதவீதத்தை தாண்டி வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பில்லியனர்களின் எண்ணிக்கை 153ல் இருந்து 185 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவர்களின் சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது.

சீனா, ஹாங்ஹாங் உள்ளிட்ட நாடுகளில் பில்லியனர்களின் சொத்து மதிப்பு 16.8 சதவீதம் சரிந்து 1.8 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. 588 என்ற எண்ணிக்கையில் இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 501 என்ற அளவுக்கு சரிந்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் அரசியல் சூழலில் ஏற்படும் பதற்றங்கள், வர்த்தகத் தடைகள் மற்றும் உயர்ந்து வரும் செலவினத் தேவைகளால் நிலையற்றத் தன்மையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று யூபிஎஸ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top