ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது’ என்று ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (6ம் தேதி) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் இன்றைய அலுவல் நேரங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை டிசம்பர் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
அதேபோல ராஜ்யசபா அவையும் கூடியது. தெலுங்கானாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வி மீது ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் புகார் ஒன்றை கூறினார்.
அவர் கூறும்போது , ‘காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கிய இருக்கையில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவிற்குள் பணம் எப்படி வந்தது ? பின்னணியில் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா..? என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று அவை நடவடிக்கைகள் முடிந்த பின்னர் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.’ இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறும்போது, ‘விசாரணை முடிந்து சம்பவத்தின் உண்மைத்தன்மை உறுதியாகும்வரை ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜே.பி.நட்டா
ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா கூறும்போது,
‘இந்த சம்பவம் தீவிரமானது. இது சபையின் கண்ணியத்தை புண்படுத்துகிறது. விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவை தலைவர் கூறியுள்ளதால் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’ என்றார்.
எம்.பி. அபிஷேக் மனு சிங்வி விளக்கம்
இந்த குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் , எம்.பி அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, ‘நான் நேற்று ராஜ்யசபாவுக்கு செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே எடுத்துச் சென்றேன். 12.57 மணிக்கு அவைக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு அவை கலைந்து விட்டது. 1.30 மணி வரை கேண்டீனில் இருந்தேன். அதன் பிறகு பார்லிமென்டில் இருந்து கிளம்பிவிட்டேன். இந்த விவகாரம் பற்றி, இப்போது தான் முதல்முறையாக நான் கேள்விப்படுகிறேன்.
ஒவ்வொரும் எம்.பி.,யும் இருக்கையை பூட்டி சாவி எடுத்து செல்லக்கூடிய வகையில் இருக்கை இருந்தால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கலாம். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கிறதா என்றும் விசாரிக்க வேண்டும். இது குறித்து தவறு இருந்தால் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
பிரபல வக்கீலான அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் முக்கிய வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகுபவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
ராகுல், பிரியங்கா பேரணி
இதற்கிடையே, அதானி விவகாரம் குறித்து பார்லி., கூட்டுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு காங்கிரஸ் எம்.பிக்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா பேரணி நடத்தினர்.